Published : 07 Apr 2024 04:53 PM
Last Updated : 07 Apr 2024 04:53 PM
மயிலாடுதுறை: தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற திமுக எம்பியை வழிமறுத்து விவசாயிகள் கேள்வி கேட்டனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், திருவிசைநல்லூர் தொடங்கி பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தஞ்சாவூர் மாவட்டம், செ.புதூர்-மயிலாடுதுறை மாவட்டம் திருவாலாங்காடு சாலையில் உள்ள திருக்குழம்பியம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, வேட்பாளர் ஆர்.சுதா மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் சென்ற வாகனத்தை திடீரென வழிமறித்த விவசாயிகள், பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்க வில்லை என கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சாலை வசதி செய்து கொடுப்பதாக, பதில் அளித்தார். அதன்பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து மற்றொரு வாகனத்தில் வந்த மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம் மற்றும் கட்சியினரை வழிமறித்த விவசாயிகள், “2 மாவட்டங்களை இணைக்கும் இந்தச் சாலையில் கடந்த 5 ஆண்டுகளாக புதிய சாலை அமைத்துத் தரவில்லை. உங்களிடம் 3 ஆண்டுகளாக மனு அளித்துள்ளோம். இதுவரை, எந்தவித நடவடிக்கையும் இல்லை” என கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த செ.ராமலிங்கம், “நான் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்தபோது, இந்த சாலையை அமைத்துக் கொடுத்துள்ளேன். இந்தச் சாலையில் அதிகமாக டிராக்டர்கள் சென்று வருவதால், சாலை சேதமடைந்து விட்டது. வெற்றிபெற்ற பிறகு பார்ப்போம்” என்று பதிலளித்தார். அப்போது, அங்கிருந்த விவசாயிகள், டிராக்டரை பயன்படுத்தாமல் விவசாயம் எப்படிச் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், சாலை அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கூறிக்கொண்டு இருந்தபோதே. செ.ராமலிங்கத்தின் வாகனம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT