Last Updated : 07 Apr, 2024 03:15 PM

5  

Published : 07 Apr 2024 03:15 PM
Last Updated : 07 Apr 2024 03:15 PM

“திமுக, காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் முயற்சி” - கே.பி.முனுசாமி @ கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி: “காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற நோக்கில் நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். 2019-ல் ஏமாற்றியது போல தற்பொழுதும் ஏமாற்ற திமுகவும், காங்கிரசும் முயற்சி செய்கின்றன, மக்கள் இதை நிச்சயம் ஏற்கமாட்டார்கள்”, என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து அக்கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, கிட்டம்பட்டி, பெத்தனப்பள்ளி கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் சேர்ந்து ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்குவோம், 100 நாள் வேலையை 150 நாட்களாக மாற்றுவோம், உயர் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கடனை முழுமையாக ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். தற்பொழுது 2024 தேர்தலே வந்துவிட்டது ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அதேபோல தற்போதைய தேர்தலில் காங்கிரசும் திமுகவும் கொடுக்கின்ற ஒரு வாக்குறுதியும் நிறைவேற்ற முடியாது.

ஒரு லட்சம் வீதம் 10 லட்சம் கோடி: குறிப்பாக காங்கிரஸ் வாக்குறுதி எந்த சூழலிலும் நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. 2022 கணக்கீட்டின்படி இந்திய துணைக்கண்டத்தில் 32 கோடி குடும்பங்கள் உள்ளன. அதில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10 கோடி என்றால் கூட ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் வீதம் 10 லட்சம் கோடி கொடுக்க வேண்டிய நிலை வரும். இந்தியாவின் ஆண்டு வருமானம், வளர்ச்சிக்கு எத்தனை கோடி நிதி தேவைப்படுகிறது.

இந்தியா வாங்கிய கடனுக்கு எத்தனை கோடி வட்டி செலுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் எத்தனை கோடி வேண்டும். பாதுகாப்புக்கு எத்தனை கோடி வேண்டும் என்பதை எல்லாம் உங்கள் கவனத்தில் விடுகிறேன். நாட்டில் இவ்வளவு தேவைகள் இருக்கும்பொழுது 60 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற நோக்கில் நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். 2019-ல் ஏமாற்றியது போல தற்பொழுதும் ஏமாற்ற திமுகவும், காங்கிரசும் முயற்சி செய்கிறது மக்கள் இதை நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75: திமுக தலைவர் ஸ்டாலின் இந்த தேர்தலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், பெண்கள் பயன்படுத்தும் சிலிண்டர் 500 ரூபாய்க்கும் கொடுப்பேன் என கூறுகிறார். இது எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதை ஸ்டாலின் எவ்வாறு குறைக்க முடியும். வாஜ்பாய் தலைமையில் 6 ஆண்டுகளும் தற்பொழுது 10 ஆண்டுகளும் என 16 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. கச்சத்தீவு பற்றி அவர்கள் குரல் கொடுத்ததில்லை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது பேசவில்லை. தேர்தல் வந்தவுடன் மீனவர்களின் வாக்குகளை பெற பாஜக கச்சத்தீவு விஷயத்தை கையில் எடுத்து கபட நாடகம் ஆடுகிறது.

எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி அவர்கள் வாக்குகளை பெற மேடையில் பேசுகிறார்கள். அதேபோல் கச்சத்தீவையும் கையில் எடுத்துள்ளனர். மீனவ மக்களுக்கு உணர்வுபூர்வமாக உதவ வேண்டுமென முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்தவர் ஜெயலலிதா. காரணம் கச்சத்தீவை மீட்க வேண்டுமென ஆட்சியில் இல்லாத பொழுது நீதிமன்றத்தை நாடினார். பின் அந்த வழக்கை வருவாய்த் துறையிடம் இணைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முயற்சி செய்தார்.

திமுக தலைவர்கள் கருணாநிதியோ, ஸ்டாலினோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசு ஆட்சி தமிழகத்துக்கு உறுதுணையாக இல்லை அதனால் நீதிமன்றத்துக்கு சென்று காவேரி ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவை பெற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா. அந்த அடிப்படையில் தான் கச்சத் தீவுக்கும் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் திமுகவோ காங்கிரஸோ பாஜகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வரலாறு தெரியாத ஸ்டாலின்… ஸ்டாலினுக்கு எந்த வரலாறும் தெரியாது மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே பேசிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் சுய புத்தியில் பேசுவதில்லை. ஆனால் பழனிசாமி சுய சிந்தனையுடன் பேசுபவர். வரலாறு எங்களுக்கு தெரியும். அவர் வரலாற்றை மாற்ற முயற்சி செய்தால் நிச்சயம் ஸ்டாலின் தான் ஏமாறுவார். நீண்ட காலமாக மத்திய அரசுடன் இணக்கமாக சென்று தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக மத்திய அரசுடன் சண்டை போடும் மனோபாவத்துடன் இருக்கிறார் ஸ்டாலின். ஆரம்பத்தில் கோ பேக் மோடி என கூறினார். பின்னர் பிரச்சினை வந்ததும் வெல்கம் மோடி என கூறுகிறார்.

தெளிவான சிந்தனை இல்லாதவர்... ஸ்டாலின் தெளிவான சிந்தனை இல்லாதவர். ஆனால் நாங்கள் தெளிவாக எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கிறோம் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெற உரிய முறையில் அணுகி திட்டங்களை கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். இதை எந்த அரசும் செய்ததில்லை. இதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என யார் ஆட்சியில் இருந்தாலும் செய்து கொண்டிருப்போம். மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டு வருவதில் எங்கள் செயல்பாடுகள் முனைப்புடன் இருக்கும். ஆனால் திமுக சுயநலத்துடன் இருக்கிறார்கள் தங்களுக்கு ஆபத்து என்றால் வெல்கம் மோடி என கூறுகிறார்கள் மக்களை பற்றி நினைக்கவில்லை.

விவசாயிகளுக்கு அமிர்தம்... பழனிச்சாமி கடைசி விவசாயி அல்ல அவர் முதன்மையான விவசாயி. சிறுவயதிலிருந்து தற்பொழுது வரை விவசாயம் செய்து கொண்டிருப்பவர். விவசாயிகளின் கஷ்டங்களை தெரிந்து கொண்டதால் தான் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களில் சாதக பாதகங்களை அறிந்து அதற்கு ஏற்றார் போல் முடிவெடுத்து இருக்கிறார். தமிழகத்திற்கு உணவளிக்கும் தஞ்சை டெல்டா தொழிற்சாலை வந்து பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எந்த தலைவருக்கும் வராத சிந்தனையாக தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருவாக்கி கொடுத்தார். இனி மீத்தேன் வாயு உள்ளிட்ட எதுவும் எடுக்க முடியாது. விஷத்தை எடுக்காமல் விவசாயிகளுக்கு அமிர்தத்தை கொடுத்தவர் பழனிச்சாமி என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்வின் போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கேபிஎம் சதீஷ்குமார், தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x