Published : 07 Apr 2024 02:08 PM
Last Updated : 07 Apr 2024 02:08 PM

‘ஸ்டார் தொகுதி’ மத்திய சென்னை கள நிலவரம் என்ன? - ஒரு பார்வை

சென்னையின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படும் பிரபல இடங்கள் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்தான் அமைந்துள்ளன. அரசு தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரை, ரிசர்வ் வங்கி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், மாநகராட்சி ரிப்பன் மாளிகை, பிரசித்தி பெற்ற கன்னிமரா நூலகம் என பட்டியல் நீள்கிறது.

மத்திய அமைச்சர்களை உருவாக்கிய தொகுதி என்பதால் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது இத்தொகுதி. இதில் வெற்றி பெற்ற முரசொலி மாறன், அவரது மகன் தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை திமுக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்த சாரதி, பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 31 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 67 ஆயிரத்து 465. பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 82 ஆயிரத்து 241. மூன்றாம் பாலினத்தவர் 455 என மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் முதல் தேர்தல் நடத்தப்பட்ட 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை திமுக 8 முறையும், காங்கிரஸ் 2 முறையும், காங்கிரஸ் (ஓ) மற்றும் அதிமுக தலா ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 1977-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் (ஓ) வேட்பாளர் பா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 1980, 1984 தேர்தல்களில் திமுக வேட்பாளர் அ.கலாநிதியும், 1989, 1991-ல் காங்கிரஸ் வேட்பாளர் இரா.அன்பரசும் வெற்றி பெற்றனர்.

1996, 1998, 1999 தேர்தல்களில் திமுக வேட்பாளர் முரசொலி மாறன் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று "ஹாட்ரிக்" சாதனை படைத்தார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். 2004, 2009 தேர்தல்களில் முரசொலி மாறனின் மகன் தயாநிதிமாறன் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் வென்றார். 2019 தேர்தலில் தயாநிதி மாறன் மீண்டும் வென்றார். 2019 தேர்தலில் தயாநிதி மாறன் ( திமுக ) 4 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்குகள் பெற்று வென்றார். அவருக்கு அடுத்தபடியாக எஸ்.ஆர்.சாம் பால் ( பாமக ) 1 லட்சத்து 47 ஆயிரத்து 391 வாக்குகளும், கமீலா நாசர் ( மக்கள் நீதி மய்யம் ) 92 ஆயிரத்து 249 வாக்குகளும், டாக்டர் கார்த்திகேயன் ( நாம் தமிழர் ) 30 ஆயிரத்து 886 வாக்குகளும், ஷேக் முகமது (எ) தெஹ்லான் பாகவி ( எஸ்டிபிஐ ) 4,543 வாக்குகளும் பெற்றனர்.

மத்திய சென்னை தொகுதியின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. பாதசாரிகளுக்கான நடைபாதைகள் அப்பகுதியில் உள்ளவர்களின் கார், ஆட்டோ, டூவீலர் நிறுத்தமாகவும், கடைகளின் விளம்பர பலகைகள், சாலையோர வியாபாரிகளின் காய் கனி உள்ளிட்ட பொருட்களை பரப்பி வைக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். "நடைபாதை நடப்பதற்கே" என்ற வாசகத்துடன் சென்னை மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு சரி. மக்களின் சிரமத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் மாநகராட்சி எடுக்கவில்லை என்பது மக்களின் வலுவான குற்றச்சாட்டு.

2015-ம் ஆண்டு சென்னையில் பெய்த மிக கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. அப்போது இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய அதிமுக அரசு தெரிவித்தது. பின்னர் 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசும் மழை வெள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததுடன் ரூ.4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது. ஆனால், 2023 டிசம்பரில் சென்னை மீண்டும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்தது. இதனால், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட எழும்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய சட்டமன்றத் தொகுகளின் பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றியதுபோல கூவம் ஆற்றில் இணைக்கப்பட்டுள்ள கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளையும் முற்றிலுமாக அகற்றி கழிவுநீர் ஓட்டத்தை சீராக்க வேண்டியது அவசர அவசியம் என்கின்றனர் பொதுமக்கள். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகைக்கேற்ப அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் இணைக்கும் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தொகுதியில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தேர்தல் களத்தில் பார்க்கப்படுகிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், படித்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். திமுகவின் பாரம்பரியமிக்க பெரும் வாக்குவங்கி பலத்துடன் தயாநிதி மாறன் களத்தில் நிற்கிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவுடன் தேமுதிகவின் பார்த்த சாரதி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நகரப் பகுதி வாக்காளர்கள் என்பதால் தங்கள் பிரச்சாரம் எடுபடும் என்ற நம்பிக்கையில் பாஜகவின் வினோஜ் பி.செல்வம் வேலை செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் கார்த்திகேயனும் சகாக்களுடன் இணைந்து உற்சாகமாக தேர்தல் பணி செய்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x