Published : 06 Apr 2024 08:25 PM
Last Updated : 06 Apr 2024 08:25 PM
மதுரை: “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.
மதுரையில் தெற்குமாசி வீதி டி.எம்.கோர்ட்டில் சனிக்கிழமை திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியது: “5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சாதாரண தேர்தல் அல்ல இது. மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் அல்ல. பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். இந்தியாவின் எதிர்காலத்தை மதச்சார்பற்ற தன்மையை, அந்த தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் இது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக, ஜனநாயக நாடாக, குடியரசாக நீடிக்குமா என்று பதில் சொல்லும் தேர்தல்.
மோடியும், அவரது கட்சியும் மீண்டும் ஓர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐயால் வேட்டையாடப்படுகின்றனர். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.
பாஜக கொள்கை ரீதியாக, அரசியலை சந்திப்பது கிடையாது. எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். உதாரணத்துக்கு, காங்கிரஸ் கட்சி வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. ரூ.135 கோடி வருமான வரித் துறையால் எடுக்கப்பட்டது. ரூ.3,500 கோடி வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் திரிச்சூர் மாவட்ட கமிட்டி 4 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டள்ளன.
எதிர்க்கட்சிகளை வேட்டையாடி, கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்து முடக்க நினைக்கின்றனர். எதிர்க்கட்சிகளை செயலற்றுப் போக வைக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகளை கைப்பாவையாக வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை மட்டும் வேட்டையாடுவது மட்டுமல்ல, ஊடகத் துறையினரையும் குறிவைத்து தாக்குகின்றனர்.
மோடியும், பாஜகவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதை மிகப் பெரிய சாதனையாக சொல்கின்றனர். கோயில் கட்டுவது அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியாகும். ஆனால், அரசியல் கட்சி சார்பில் நடந்ததுபோல் விளம்பரப்படுத்தப்பட்டது. அதில், பிரதமர் மோடி ஒரு பூசாரியைப் போல் நடந்து கொண்டிருந்தார்.
இ்ண்டியா கூட்டணியை ஊழல் கூட்டணி என பிரதமர் மேடி பேசுகிறார். ஆனால், ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை. அவர்கள் எப்பேர்ப்பட்ட ஊழல்வாதிகள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தேர்தல் பத்திரம் ஊழலில் மோடி தலைமையிலான பாஜக அரசு மிகப் பிரம்மாண்டமான ஊழலை செய்யும் அரசாக உளளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்மூலம் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். இதில் பாஜக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.8,252 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் முறையான விசாரணை நடைபெற வேண்டும் என கோரியுள்ளோம்.
ஒரே தேசம், ஒரே மொழி, தற்போது ஒரே தலைவர் என மோடியை ஆர்எஸ்எஸ் முன்னிறுத்துகிறது. நாடாளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை ஒரே தேர்தல் நடத்த திட்டமிடுகின்றனர். நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்காமல் பாஜக அரசு மாநிலங்களை வஞ்சித்து வருகிறறது. தமிழக, கேரள மக்கள் அரசியல் புரிந்தவர்கள். விஷயம் புரிந்தவர்கள். கடந்த தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காவிடாமல் செய்தார்கள். மீண்டும் அவர்களுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கவிடாமல் செய்ய அணி திரள வேண்டும்.
பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும். சில மாதம் முன்பு வரை சேர்ந்திருந்த அதிமுக கூட்டணியையும் தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும். மாநில உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் வாழ்வா, சாவா என்னும் தேர்தல் இது. வகுப்புவாத அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பது வரலாற்றுத் தீர்ப்பாக இருக்கப்போகிறது.
அரசமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை, சமூக நீதியை பாதுகாப்பதற்கு மக்கள் முன்வரவேண்டும். மீண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தோடு வெற்றி பெறச் செய்யவேண்டும்” என்றார் பிரகாஷ் காரத்.
இந்தக் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் பகுதிக் குழு செயலாளர் பி.ஜீவா தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT