Published : 06 Apr 2024 05:48 PM
Last Updated : 06 Apr 2024 05:48 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் தங்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய நட்சத்திரப் பேச்சாளர்களை எதிர்பார்த்து பாமக, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் சச்சிதானந்தம், எஸ்டிபிஐ கட்சி சார்பில் முகமதுமுபாரக், பாமக சார்பில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி சார்பில் கயிலைராஜன் ஆகியோருடன் 11 சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் முடிந்தவுடனேயே பிரதானக் கட்சி வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். முதற்கட்டமாக தொகுதிக்குள் முக்கிய பிரமுகர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த வேட்பாளர்கள், அடுத்தகட்டமாக சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினர்.
இதையடுத்து திறந்தவேனில் நகர்ப்புறம், கிராமப்புறங்களில் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கத் தொடங்கிவிட்டனர். நான்கு வேட்பாளர்களுமே தொகுதிக்குள் மக்களைச் சந்தித்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தொகுதியைச் சேர்ந்த அமைச்சர்களான ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வேட்பாளருடன் உடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி, நடிகை ரோகிணி, லியோனி, முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தி.க.தலைவர் கி.வீரமணி என நட்சத்திர பேச்சாளர்கள் தொடர்ந்து திண்டுக்கல் தொகுதிக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் கூடுதல் தெம்புடன் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்றி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் வேட்பாளருடன் சென்று மக்களைச் சந்தித்து வருகின்றனர். அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் உடன் சென்று வருகின்றனர். இவரை ஆதரித்து மாநில அளவில் நட்சத்திரப் பேச்சாளர்கள் யாரும் இதுவரை தொகுதிக்கு வரவில்லை.
பிரச்சார முடிவின் இறுதி நாட்களில் முக்கியப் பிரமுகர்கள் இவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவும் வெளியூரில் இருந்து நட்சத்திரப் பேச்சாளர்கள் இதுவரை தொகுதிக்குள் வரவில்லை.
பாமக வேட்பாளர், தொகுதிக்குள் இருக்கும் பாஜக, பாமக நிர்வாகிகளுடன் சென்று மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரது கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் முடியும் இறுதி நாட்களில் திண்டுக்கல் தொகுதிக்கு வந்து பாமக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்வர் என்ற நம்பிக்கையில் பாமக நிர்வாகிகள் உள்ளனர்.
நட்சத்திரப் பேச்சாளர்களை மார்க்சிஸ்ட் முன்னதாகவே களமிறக்கிய நிலையில், எஸ்டிபிஐ, பாமக வேட்பாளர்கள் நட்சத்திரப் பேச்சாளர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT