Published : 06 Apr 2024 04:50 PM
Last Updated : 06 Apr 2024 04:50 PM
சென்னை: “காங்கிரஸ் 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்' என்று கூறுகிறது. ஆனால், திமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டு அவர்களால் எப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்?” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “நான் தற்போது கலாச்சாரமும் பக்தியும் நிறைந்த பூமியில் நின்று கொண்டிருக்கிறேன். அதனால்தான், திமுகவினர் சனாதன தர்மத்தை எதிர்த்தபோது நாடே கொந்தளித்தது.
'ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்' என காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், திமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டு அவர்களால் எப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்? 1980-களின் பிற்பகுதியில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது அம்பேத்கரின் அரசியல் சாசனத்தையே எரித்தனர் திமுகவினர். திமுக தலைவர்கள் இந்து மதத்தை அவதூறாக பேசிவிட்டு இன்று நாட்டின் முன் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.
தற்போது என்டிஏ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடி இருக்கிறார். ஆனால், இண்டியா கூட்டணியில், 'யார் பிரதமர் வேட்பாளர்?' என்று அவர்களால் கூற முடியுமா? பாஜகவின் நோக்கமே வளர்ச்சியடைந்த இந்தியாவை கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஆனால், இண்டியா கூட்டணிக்கு என்ன அஜெண்டா இருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடியுமா? இண்டியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது, கொள்கை கிடையாது.
காங்கிரஸ் கட்சி தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் ஒரு நாட்டையே அச்சுறுத்தும் வகையில் செயல்படக்கூடிய இக்கட்சி எப்படி நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும்? காங்கிரஸும் , இண்டியா கூட்டணியும் பயங்கரவாத அமைப்புகளுடனும், அது தொடர்புடைய கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்துதான் நமது ஜனநாயகத்தை பாதுகாக்கப் போகிறார்களா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றால் பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்கள். உங்கள் குடும்பத்துக்காக இந்தத் தேர்தலில் வாக்களியுங்கள்; அவர்கள் குடும்பத்துக்காக அல்ல. பாஜகவுக்கு வாக்களியுங்கள்... ஏனென்றால் நாடு மீண்டும் மோடியை விரும்புகிறது” என்றார் ஸ்மிருதி இரானி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT