Published : 06 Apr 2024 03:36 PM
Last Updated : 06 Apr 2024 03:36 PM

“சமூக நீதிக்கு எதிரான திமுக நடவடிக்கைகளை திருமாவளவன் கண்டுகொள்வது இல்லை” - வானதி சீனிவாசன்

சிதம்பரம்: "கடந்த 10 ஆண்டுகளாக சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கும் திருமாவளவன், மத்திய அரசை குறை கூறுவதற்கும், பிரதமர் மோடியை வசைபாடுவதற்கும் தான் நேரத்தை செலவழித்தாரே தவிர, தொகுதியின் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். மேலும், “சமூக நீதிக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகளை திருமாவளவன் கண்டுகொள்வது இல்லை” என்றும் அவர் சாடினார்.

சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக சிதம்பரம் தொகுதி எம்பியாக இருக்கும் திருமாவளவன் மத்திய அரசை குறை கூறுவதற்கும், பிரதமர் மோடியை வசைபாடுவதற்கும் தான் நேரத்தை செலவழித்தாரே தவிர தொகுதியின் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், மத்திய அரசின் பல திட்டங்கள் இந்த தொகுதியில்தான் முழுமையாக கிடைத்துள்ளன.

தமிழகத்தில் கனிம வளங்களை கொண்டு அதிக வருமானம் ஈட்டுவது கடலூர் மாவட்டம் தான். ஆனால், இங்குள்ள மக்கள் வறுமையோடு வாழும் சூழல்தான் உள்ளது. சோழர்கள் காலத்தில் இந்தப் பகுதிக்கென நீர் மேலாண்மை உருவாக்கப்பட்டது. அதை காப்பாற்ற கூட தமிழக கட்சிகளால் முடியவில்லை. சோழர்கள் காலத்தில் இருந்த நீர் மேலாண்மை திட்டத்தை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையோடு கொண்டு வர சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி வேண்டும்.

ஆன்மிகச் சுற்றுலாவுக்கு அதிகமான வாய்ப்புகளை பெற்றுள்ள இந்தத் தொகுதியின் எம்பியோ, கோயிலுக்கு எதிராக, இந்து மதத்துக்கு எதிராக பேசுவதை முழுநேர தொழிலாக கொண்டுள்ளார். அவரால் எப்படி ஆன்மிக சுற்றுலாவை வளர்த்து இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க முடியும். இந்து மத எதிர்ப்பில் உள்ள ஒரு எம்.பி.யால் இந்தப் பகுதியில் இருக்கும் கோயில்களை வைத்து இந்தப் பகுதி மக்களுக்கு எப்படி முன்னேற்றத்தை கொண்டுவர முடியும்.

தங்களுடைய சித்தாந்தத்தை பேசும் எம்.பி.யைவிட, சிதம்பரம் தொகுதி மக்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான எம்.பி தான் இப்போது அவசியம். கூட்டணி பலத்தை வைத்துக்கொண்டு திமுக அரசு செய்கின்ற அத்தனை சமூக நீதிக்கு எதிரான விஷயங்களையும் கண்டும் காணாமலும் போல் இருக்கிறார் திருமாவளவன். பட்டியலினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக, ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் என்பது இன்று மக்களை ஏமாற்றுகிற மாடலாக உள்ளது. வாரிசுக்கான மாடலாக தான் திராவிட மாடல் உள்ளது. பட்டியலினத்தவர்களுக்காக கட்சி நடத்துகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களின் தனிப்பட்ட நலனுக்காக பட்டியலின மக்களின் நலன்களை, உரிமைகளை அடமானம் வைத்து கொண்டிருக்கிறார்கள்.

சாதி, மதத்தை பார்த்து அரசியல் செய்துகொண்டிருப்பது காங்கிரஸ் மற்றும் திமுகதான். அத்தனை மக்களையும் ஒருங்கிணைக்க முயற்சிப்பது தேசிய ஜனநாயக கூட்டணி. நாளை ஜே.பி.நட்டா சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் 2019ல் பணபலத்தை கொண்டு மோடி எதிர்ப்பை உருவாக்கினார். இப்போது அது நடக்காது. இடஒதுக்கீடு, சமூக நீதி குறித்து பேசும் ஸ்டாலின், திமுகவில் தலைவராக பட்டியலினத்தவரை சார்ந்த ஒருவரை கொண்டுவர முடியுமா அல்லது துணை முதல்வர் பதவியை பட்டியலினத்தவருக்கு வழங்க முடியுமா.

மோடியை சமூக நீதிக்கு எதிரானவர் என்று கூறுகிறார்கள். ஆனால், 11 பெண் அமைச்சர்களுக்கு முக்கியமான துறைகளை ஒதுக்கியவர் மோடிதான். ஆனால், திமுக அமைச்சரவையில் முதல் வரிசையில் எதாவது பெண் அமைச்சர்கள் உள்ளார்களா, கிடையாது. வசனம் பேசி இனியும் தமிழக மக்களை திமுக ஏமாற்ற முடியாது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது எப்போதும் ஆட்சிக்கு வர முடியாத வெற்று அறிக்கை. அது ஒரு தேசிய கட்சியின் அறிக்கை போன்றா இருக்கிறது. மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x