Published : 06 Apr 2024 03:17 PM
Last Updated : 06 Apr 2024 03:17 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: “ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழக அரசின் முத்திரையாக உள்ளது. பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியை ஆண்டாள் நாச்சியார் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.
தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம், 2 கோடி பேருக்கு வேலை எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி, இருக்கின்ற வேலையையும் பறித்துவிட்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளார். புதுமைப் பெண், நான் முதல்வன் இன்னுயிர் காக்கும் 48, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், எண்ணும் எழுத்தும் என சொல்லப்படாத பல திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.
ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் நடக்கும் தேர்தல் இது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழக அரசின் முத்திரையாக உள்ளது. பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியை ஆண்டாள் நாச்சியார் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆண்டாள் சாதி, மத பேதமின்றி அன்பு தழைக்க வேண்டும், நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என வலியுறுத்தியவர். நானும் இந்துதான். நாம் அனைத்து தரப்பு மக்களுடன் இணைந்து வாழ்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளித்து கொண்டிருக்கிறார்.
பட்டதாரி இளைஞர்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் அறிக்கை அமல்படுத்தப்படும், 30 லட்சம் காலிப் பணியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை காங்கிரஸ் வாக்குறுதியாக, ராகுல் காந்தி நியாய பத்திரம் வழங்கி உள்ளார். தமிழ்நாட்டு உரிமையை பறித்த பாஜகவுக்கு துணையாக இருந்தது அதிமுக. இவர்களை வாக்காளர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஜனநாயகத்தை காப்பாற்ற உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் செல்வபெருந்தகை கூறுகையில், “ஊழலை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், உலகத்திலேயே மிகப் பெரிய தேர்தல் பத்திர ஊழலை செய்துள்ளனர். சிஏஜி அறிக்கை குறித்து மோடி பேச மறுக்கிறார். இண்டியா கூட்டணி மக்களை நம்பி உள்ளது. ஆனால், பாஜக ஈ.டி (அமலாக்கத்துறை) சி.பி.ஐ (மத்திய புலனாய்வுத் துறை), ஐ.டி (வருமான வரித் துறை), தேர்தல் ஆணையத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது.
மோடியின் நண்பர்தான் தேர்தல் ஆணையராக வந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார். முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த செல்வப்பெருந்தகை, நாட்டு மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT