பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை
அண்ணாமலை
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள ஆதி திராவிட மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, காலை உணவு அருந்துவதற்காகக் காத்திருந்த 5 மாணவிகளும், விடுதி சமையலர் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

விடுதி மேற்கூரை குறித்து, விடுதி ஊழியர்கள் ஏற்கெனவே கல்வி துறைக்கு தகவல் தெரிவித்திருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகம் முழுவதுமே, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக, தங்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கட்டிடங்களோ, விடுதிகளோ இதுபோன்ற மோசமான நிலையில் இருப்பதை அனுமதிப்பார்களா? பள்ளிக் குழந்தைகளிடமும் திமுக அரசு தீண்டாமை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக் கது.

உடனடியாக, அனைத்து பள்ளிகள், அரசு விடுதிகளைச் சீரமைக்க வேண்டும். ஆயக்குடி விடுதியில், காயமடைந்த மாணவியருக்கும், சமையலருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in