Published : 06 Apr 2024 08:54 AM
Last Updated : 06 Apr 2024 08:54 AM
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸின் சந்தர்ப்பவாத அரசியல் மக்களுக்கு நன்கு தெரியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் விழுப்புரம் து.ரவிக்குமார் (விசிக), கடலூர் கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாட்டை நிர்வகிக்கும் மத்திய அரசு செயலர்களில் 3 சதவீதம்கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் இல்லை. உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர், உதவிப் பேராசியர்கள் பணியிடங்கள் இடஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படவில்லை. 2, 3 தலைமுறைகளாகத்தான் மரியாதையான இடத்துக்கு வந்துள்ளோம். இதற்கு இடஒதுக்கீடுதான் காரணம். ஆனால், பாஜகவினர் இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிராக செயல்படுகின்றனர். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு கிடைக்காது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஒன்றியத்தில் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. பாஜக இதுபோன்று தேர்தல் வாக்குறுதி அளிக்குமா?
தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டம் கொடுக்காமல், சாதி வாரி கணக்கெடுப்புக்கு முட்டுக்கட்டை போடும் பாஜகவுடன் சேர்ந்து, பிரதமரைப் புகழ்கிறார் ராமதாஸ். அவரது சந்தர்ப்பவாதம் யாருக்கும் தெரியாது என்று கருதுகிறார்.
தமிழக அரசின் நலத் திட்டங்களை பல்வேறு மாநில அலுவலர்கள் வந்து பார்த்து, அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்த தொடங்கியிருக்கின்றனர். காலைஉணவுத் திட்டம் தற்போது கனடாநாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் திட்டத்தால் கிராம பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.
அதிமுக அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாக பழனிசாமி பேசி வருகிறார். இந்த திட்டத்தை நிறைவேற்றவே மாட்டார்கள் என்றவர், தற்போது வெட்கமின்றி இப்படிப் பேசுகிறார். மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதற்குத் துணைபோன பாமக, அதிமுக கட்சிகளை வீழ்த்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் பொன்முடி, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், சி.வெ.கணேசன் மற்றும்கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT