Published : 05 Apr 2024 08:50 PM
Last Updated : 05 Apr 2024 08:50 PM
சென்னை: “தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தலைநகர் டெல்லியில் வெளியிட்டுள்ளனர். 10 ஆண்டு கால மத்திய பாஜக அரசினால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு தீர்வு காண்கிற வகையில் தேர்தல் அறிக்கை அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு ராகுல் காந்தி தொடர்ந்து மேற்கொண்ட பரப்புரையின் அடிப்படையில் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, தமிழக மக்களின் கோரிக்கையான நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பப்படி நடத்திக் கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும், மத்திய அரசு பணிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு; பெண்களுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
இந்த அறிவிப்பு மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்கள் தற்சார்பு நிலையுடன் வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பாஜக அரசில் பட்டியலினத்தவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை தடுக்க ‘ரோகித் வெமுலா” சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, மகாலட்சுமி திட்டத்தின்கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்று கூறுவது சிறப்பான வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகும்.
ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சட்ட திருத்தம் கொண்டு வரப்படும், இதன்மூலம் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் முழுமையான இடஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.
அதேபோல, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு 10 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யக் கூடியதாகும்.
பொதுப்பட்டியலில் உள்ள பல துறைகளை மத்திய பாஜக அரசு சட்டம் இயற்றி மாநில உரிமைகளை பறித்திருப்பதற்கு முடிவு கட்ட தேர்தல் அறிக்கை உறுதி கூறியிருக்கிறது. செஸ் வரி வசூலில் மாநிலங்களை புறக்கணிக்கும் பாஜகவின் அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டு வரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 400 ஆக அதிகரிக்கப்படும். மீனவ மக்களின் படகுகள் பறிமுதல், மீனவர்கள் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, மத்தியில் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின் மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி விரைவில் அமையும்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT