Published : 05 Apr 2024 06:55 PM
Last Updated : 05 Apr 2024 06:55 PM

“விலைவாசி உயர்வே மத்திய, மாநில அரசுகள் அளித்த பரிசு” - பிரேமலதா தாக்கு @ சென்னை

வட சென்னை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை: “மின் கட்டணம், சொத்து வரி, அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், தங்கம் விலை உயர்வு... இப்படி எண்ணற்ற விலை உயர்வுகளைத்தான் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்குப் பரிசாக கொடுத்துள்ளனர்” என்று சென்னையில் நடந்த பிரச்சாரத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை கொருக்குப்பேட்டைப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், “எதிர்கால தமிழகத்தை போதை தமிழகமாக மாற்றிய பெருமை ஆளும் திமுகவையே சாரும். போதைப்பொருட்கள் விற்பனையில் கைது செய்யப்படுபவர்கள் பலரும் திமுகவைச் சார்ந்தவர்களாக உள்ளனர். போதையில்லா தமிழகமாக மாற்றுவேத, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இலக்கு.

இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசுகளாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. 1974-ல் முடிந்துபோன கச்சத்தீவு குறித்த விவகாரத்தை தற்போது பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். வாழ வேண்டிய மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல், பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டுள்ளனர்.

அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல். டீசல், கேஸ் சிலிண்டர், தங்கம் விலை உயர்வு, இப்படி எண்ணற்ற விலை உயர்வுகளைத்தான் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்குப் பரிசாக கொடுத்துள்ளனர்.

திமுக தாங்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, திமுக பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவித்தது. இலவச பேருந்து என்ற பெயரில், பேருந்தின் முன்னாடியும் பின்னாடியும் பிங்க் கலர் அடித்து ஏமாற்றுகிற திமுக அரசுக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்” என்று பிரேமலதா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x