Published : 05 Apr 2024 02:20 PM
Last Updated : 05 Apr 2024 02:20 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் வனத்துறையை கண்டித்து அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முத்தையா, ராமச்சந்திரராஜா, சட்ட ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ராஜபாளையம் அய்யனார் கோயில், தேவதானம் சாஸ்தா கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, சதுரகிரி ஆகிய 4 இடங்களில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து சூழல் மேம்பாட்டுக் குழு என்ற பெயரில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் விவசாயிகளிடம் ரூ.20 கட்டணமாக வசூலிக்கின்றனர்.
4 இடங்களிலும் தலா ரூ.4 லட்சம் வரை வசூல் செய்கின்றனர். இதனால் விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சூழல் மேம்பாட்டு குழுவை கூட்டுறவு சங்கமாக பதிவு செய்து முறையாக கட்டணம் வசூலிப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு சூழல் மேம்பாட்டு குழு என்ற பெயரில் எந்த சங்கமும் பதிவு செய்யப்படவில்லை, வருடாந்திர வரவு, செலவு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக்கோரி மாவட்ட நிர்வாகம் தொடங்கி தலைமை செயலர் வரை பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் வனத்துறையை கண்டித்து மக்களவை தேர்தலை புறக்கணிப்பது என ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT