Published : 05 Apr 2024 12:19 PM
Last Updated : 05 Apr 2024 12:19 PM
விழுப்புரம்: பானை சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம்பி, அதிமுக சார்பில் பாக்கியராஜ், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் முரளி சங்கர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 2 வது முறையாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் துரை ரவிக்குமார் எம்பி அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே இந்து தமிழுக்கு அளித்த பேட்டி,
கேள்வி: புதிய சின்னமான பானை சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க என்ன யுக்தியை பயன்படுத்தபோகிறீர்கள்?
பதில்: பானை சின்னத்தை கொண்டு சென்று சேர்ப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. மரக்காணத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து அதில் பானையை வைத்து வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டது.
கேள்வி: தேர்தல் விதிமீறல் குறித்த வழக்கின் மூலம் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. தேர்தல் சட்டத் திருத்தம் குறித்து பேசுவீர்களா?
பதில்: தேர்தல் சீர்திருத்தம் குறித்து பல அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை அரசே செய்ய வேண்டும். தேர்தல் பரப்புரை காலத்தை குறைக்க வேண்டும் இப்படி பல பரிந்துரைகளை கொடுத்துள்ளோம்.
கேள்வி: திமுக கூட்டணி வலுவாக உள்ளது போல தோன்றுவது மாயை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளது குறித்து?
பதில்: தேர்தல் முடிவுகள் அதிமுகவே மாயை என்று சொல்லிவிடுமோ எல்லோரும் நினைக்கும் அளவுக்கு ஊடகங்களில் வரும் செய்திகள் மூலம் அதிமுக 3 வது இடத்துக்கு தள்ளப்படும் எனச் சொல்கிறார்கள்.இது குறித்து பழனிசாமி கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
கேள்வி: கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் எத்தனை சதவீதம் நிறைவேற்றமுடிந்தது?
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளேன். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போதே 100 சதவீதம் நிறைவேற்றும்போது, வருகின்ற இண்டியா கூட்டணி ஆட்சியில் என்ன செய்வேன் என எண்ணிப்பாருங்கள். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிதி அமைச்சரிடம் பேசி ரூ.1200 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அது திருவண்ணாமலை கூட்டு குடிநீர்திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட்டுள்ளது.
ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தையும் ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. என் கவனம் முழுவதும் கல்வித் துறையில் இருந்தது. திருமதி வசந்தி தேவியை அழைத்து அவரை கல்வியின் தூதுவர் என அறிவித்தேன். மாதிரி பள்ளிகளுக்கு, நூலகங்களுக்கு என் சொந்த பணத்தில் 1000 புத்தகங்களை வழங்கியுள்ளேன்.
தமிழகத்திலேயே நான் பிறபடுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கட்டில் வழங்கியுள்ளேன். சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே முதல் முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி விழுப்புரத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
அடுத்த முறை இதை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்த அடுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன் முதலாக வானூரில் மினி டைடல் பார்க் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதே போல என் பரிந்துரையின் பேரில் திண்டிவனத்தில் சிப்காட் வரவழைக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கு இந்திய ஒதுக்கீட்டில்இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. ஜூன் 17 ஆம் தேதி பதவியேற்ற பின் 27ம் தேதி இதற்காக வாதிட்டு, கடந்த 2 ஆண்டுகளில் 12 ஆயிரம் பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மீன்வர்கள் லைசென்ஸ் வாங்கி மீன் பிடிக்க வேண்டும் என்ற சட்டத்தை நீக்க போராடி வெற்றி பெற்றோம். இச்சாதனைகளை அங்கிகரித்து எனக்கு வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT