Published : 05 Apr 2024 12:33 PM
Last Updated : 05 Apr 2024 12:33 PM

தேர்தல் ஆணையம் கெடுபிடி - ‘அமைதி’யான முறையில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

சேலம்: தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி காரணமாக சேலம் மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சியினர் அலறவிடும் மைக் செட்டுகள், கட்சி கொடி, பேனர், பிரமாண்ட கட்-அவுட் ஏதுமின்றி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சேலம் மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 8,23,336 பேரும், பெண் வாக்காளர்கள் 8,25,354 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 221 பேர் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 பேர் வாக்களிக்கவுள்ளனர். சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக சார்பில் விக்னேஷ், பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முரளி, உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் மாணிக்கம் உள்பட 25 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. வரும் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான அறிகுறியோ, ஆரவாரமோ இல்லாததை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

வழக்கமாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெருவுக்கு தெரு ஒலி பெருக்கிகளை கட்டி, தேர்தல் பிரச்சார பாடல்களை அலறவிடுவது, வீதிகள் தோறும் கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டுவது, பேனர்கள், கட் அவுட்டுகள் வைப்பது என கடந்த கால தேர்தல்கள் பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கும். ஆனால் தற்போது தேர்தலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்கான தேர்தல் நடைமுறை விதி முறைகள் அமல்படுத்தியதில் இருந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி, மக்களவை பொதுத் தேர்தல் பார்வையாளர் பாட்டீல் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுவர் விளம்பரங்கள், பேனர், கட்-அவுட், கட்சி கொடி தோரணங்கள் என வைத்து பிரச்சாரம் செய்தால் அவற்றை கணக்கெடுத்து வேட்பாளர்களின் செலவு கணக்குகளில் சேர்க்க தேர்தல் அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இதனால்,வேட்பாளர்கள் மக்களிடம் சாதாரணமாக வாகனங்களில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வித விளம்பரமுமின்றி, ஆடம்பர மில்லாமல், அமைதியான முறையில் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை பொது மக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் ஒலி பெருக்கி தொல்லை களில் இருந்து விடு பட்டு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x