Published : 05 Apr 2024 07:22 AM
Last Updated : 05 Apr 2024 07:22 AM
சென்னை: தமிழகத்தில் ஏற்கெனவே 12-டிபடிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வீடு வீடாக சென்று தபால்வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைதேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடஉள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கு அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியில் இடிசி எனப்படும் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
இதுதவிர, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 25-ம்தேதி வரை ‘12-டி’ படிவத்தை வீடு வீடாக வழங்கினர். பின்னர், அந்த படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 6.08 லட்சம் மூத்த குடிமக்களில் விருப்ப அடிப்படையில் 4.30 லட்சம்பேருக்கு 12-டி படிவம் வழங்கப்பட்டது. அதில் 77,445 பேர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர். அதேபோல, 4.51 லட்சம் மாற்றுத் திறனாளிகளில் 3.65 லட்சம் பேருக்கு படிவம் வழங்கப்பட்டது. இதில் 50,676 பேர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர். இதுதவிர, 16 செய்தியாளர்களும் 12-டி படிவத்தை பூர்த்தி செய்து தந்துள்ளனர். பெறப்பட்ட படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக ஈரோடு, கோவை தொகுதிகளில் வாக்குப்பதிவு முதன்மை அலுவலர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல் துறையினர் அடங்கிய குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். அனுமதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறன் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, தபால் வாக்கு படிவத்தை அவர்களிடம் வழங்கினர். அதில் அவர்களது வாக்கை பதிவு செய்து, சீலிட்டு உரிய பெட்டியில் அவற்றை சேர்த்தனர். இதுபோல, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்த நாட்களில் தபால் வாக்குகள் பெறப்படுகின்றன.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுகூறியபோது, ‘‘தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து 12-டி படிவத்தை பூர்த்தி செய்து அளித்தவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது. படிவத்தை பூர்த்தி செய்து அளிக்காதவர்கள், பூர்த்தி செய்து அளித்தும் தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுமதிக்கப்படாதவர்கள் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம். தபால் வாக்கு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டுக்கு அலுவலர்கள் வரும்போது, வீடு பூட்டியிருந்தால் 2-வது முறை வருவார்கள். அவர்கள் வரும்போது வீட்டில் இருந்துவாக்கை பதிவு செய்யலாம். ஏப்ரல் 18-ம் தேதி வரை இப்பணி நடைபெறும்’’ என்றார்.
தலைமை தேர்தல் அதிசாரி சத்யபிரத சாஹு, மாநில தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர், அனைத்துமாவட்ட தேர்தல் அதிகாரிகள்,காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் முன்னேற்பாடு குறித்து நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். இதில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏப்.19-ம் தேதி பொது விடுமுறை: அரசு அறிவிப்பு - தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து, செலாவணி முறி சட்டத்தின்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment