Published : 05 Apr 2024 05:35 AM
Last Updated : 05 Apr 2024 05:35 AM
தேர்தல் விதிமீறல் தொடர்பான நிகழ்நேர புகார்களை ‘சி விஜில்’ செயலி மூலம் பொதுமக்கள் அதிகளவில் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகம் சட்டம் -ஒழுங்கு விவகாரத்தில் பிரச்சினை இல்லாத மாநிலமாக இருந்தாலும், முந்தைய தேர்தல்களில் அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் பிடிபட்ட காரணத்தால், செலவினம் தொடர்பான முக்கியத்துவம் மிகுந்த மாநிலமாக இந்திய தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதைமுன்னிட்டு,வாக்குக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சில குறிப்பிட்ட தொகுதிகளுக்கு 2 செலவின பார்வையாளர்களை ஆணையம் நியமித்துள்ளதுடன், அனைத்து தேர்தல் செலவினம் தொடர்பான பணிகளையும் கண்காணிக்க ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பி.ஆர்.பாலகிருஷ்ணனை நியமித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தேர்தல்நடத்தை விதிகள் மீறல், பணம், பரிசுப்பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ள ‘ சி விஜில் ’ செயலியில்வரும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்த செயலியில் வரும்புகார்கள் நிகழ்நேர பதிவுகளாக இருப்பதால், அவற்றின் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த மார்ச்16 முதல் தற்போது வரை தமிழகத்தில் 2,168 புகார்கள் பெறப்பட்டு 2,139 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. இதில் 1,071 புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதம் 29 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவான புகார்களே பதிவாகின்றன. எனவே, தேர்தல் விதிமீறல் தொடர்பான நிகழ்நேர புகார்களை ‘சி விஜில்’ செயலி மூலம் தமிழக மக்கள் அதிகளவில் அளிக்க வேண்டும்
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1 லட்சத்து 25,939புகார்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து25,551 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கேரளாவில் 71,168 புகார்கள் பெறப்பட்டு 70,929-க்குதீர்வு காணப்பட்டுள்ளது. இதில் 67,128 புகார்கள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் ஜார்க்கண்டில் 14,684 புகார்களும், கர்நாடகாவில் 13,959 புகார்களும் பதிவாகியுள்ளன.
இதுதவிர, புகார் அளித்தவர் பெயர் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. எனவே, பொதுமக்கள் பயமின்றி தாங்கள் காணும் விதிமீறல்களை சி விஜில் செயலியில் பதிவு செய்து, விவரங்களை அளித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment