Published : 05 Apr 2024 06:02 AM
Last Updated : 05 Apr 2024 06:02 AM

திமுக அலுவலகத்தில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்

திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று இரவு சோதனை மேற்கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/சேலம்: திருநெல்வேலியில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில்வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், சேலம் துணை மேயர் சாரதா தேவி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மத்திய மாவட்டதிமுக அலுவலகம், பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான ஆவுடையப்பன் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

அப்போது திடீரென 9 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர், அதிகாரி காசிசங்கர் தலைமையில் திமுக அலுவலகத்துக்குச் சென்றனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர். தொடர்ந்து, வருமான வரித் துறைஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திமுகவினர் அங்கு திரண்டு, மத்தியஅரசுக்கு எதிராக கோஷமெழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த சோதனை இரவு 9 மணிவரை நீடித்தது.

ஆவுடையப்பன் மறுப்பு: இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் மற்றும்முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. சோதனைக்குப் பின்னர் வெளியே வந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வருமான வரித் துறையினல் சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை" என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில், சோதனையின் முடிவில் கட்சி அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் ஆவணங்கள் தொடர்பான படிவத்தில், வருமான வரி த்துறை அதிகாரிகள் ஆவுடையப்பனிடம் கையெழுத்து பெற்றுச் சென்றுள்ளனர்.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக, திமுக அலுவலகத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

துணை மேயர் வீட்டில்... சேலம் கன்னங்குறிச்சி சின்ன முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாரதா தேவி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மாநகராட்சி துணை மேயராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வருமான வரித் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, வருமான வரித் துறையினர் அவரது வீட்டுக்குச் சென்றபோது, துணை மேயர் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றிருந்தார். அவரது மகன் வீட்டில்இருந்த நிலையில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். எனினும், பணம், பரிசுப் பொருள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x