Published : 04 Apr 2024 10:11 PM
Last Updated : 04 Apr 2024 10:11 PM
கோவை: “நான் முதல்வருக்கு சவால் விடுகிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கு தில்லு, திராணி தெம்பிருந்தால், நீங்களே ஒரு கூட்டத்தைக் கூட்டுங்கள், மேடையை போடுங்கள். நீங்கள் உங்களது ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பற்றி பேசுங்கள். நானும் நேரில் வந்து பேசுகிறேன். நீங்கள் எந்த இடத்துக்கு கூப்பிட்டாலும் நான் வரத் தயார்” என்று கோவையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களவைத் தேர்தலில் கோவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். கொடிசியா அரங்கத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: “இங்கு திரண்டிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது, இது அதிமுக பிரச்சாரக் கூட்டம் அல்ல. அதிமுக மாநாடு நடப்பதைப் போல மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது.
தேர்தல் என்ற போரிலே எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிக்கொடியை நாட்டுவோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் 25 நாட்களுக்கு முன்பு அதிமுக பலவீனமான கூட்டணி, அதிமுக கூட்டணியில் யாரும் இடம்பெறவில்லை என்று எழுதினார். கடந்த 10 நாட்களில் அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
கோவை அதிமுகவின் கோட்டை. இந்தக் கோட்டையில் எவராலும் நுழைய முடியாது. இது அதிமுகவின் எஃகு கோட்டை. 2021 சட்டமன்றத் தேர்தலில் பத்துக்கு பத்து தொகுதியிலும் வெற்றிக் கண்ட மாவட்டம் கோவை மாவட்டம். நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றியைத் தந்த மாவட்டம் கோவை மாவட்டம். எனவே, இந்த மாவட்டத்தின் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இது சாதாரண வெற்றியாக இருக்கக்கூடாது. அகில இந்திய அளவிலான பேசப்படுகின்ற வெற்றியாக இந்த கோவை மக்களவைத் தொகுதியில் பெறும் வெற்றி இருக்க வேண்டும். அதிமுக ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாது என்று பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு, கோவை மாவட்ட மக்கள் 2021-ல் நடந்த தேர்தலில் எப்படி அற்புதமான வெற்றியை கொடுத்தீர்களோ, அதைவிட லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றியைப் பெற்றுத் தரவேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி பலம் அதிகமாக இருப்பதால், தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தார். அது பகல் கனவாகிவிட்டது. கூட்டணி எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கும். ஆனால், மக்கள் பலம் அதிமுகவின் பக்கம் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறது. மக்கள் பலம்தான் வலிமையானது. மக்கள் பலத்தால்தான் வெற்றி பெற முடியும். அது அதிமுக பக்கம் இருக்கிறது.
உழைப்பாளர்கள் நிறைந்த கட்சி அதிமுகவும், அதன் கூட்டணியும். எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் உழைப்பையும், மக்களையும் நம்பி இருக்கிறது. இந்த தேர்தலில் உழைப்புக்கு வெற்றி நிச்சயம். முதல்வர் ஸ்டாலின் கூட்டங்களில் ஏதேதோ பேசி வருகிறார். அவரது பதவிக்கு தகுந்த பேச்சுகள் இல்லை. ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் பொறுப்போடு பேச வேண்டும். ஆனால், நாகரிகம் தெரியாத ஒரு மனிதர் அவர்.
முதல்வர் ஸ்டாலின் நகரத்தில் இருந்து வந்தவர், நான் கிராமத்தில் இருந்து வந்தவன். உங்களைப் போல பலமடங்கு எனக்கு பேசத் தெரியும். எனவே, நாவடக்கம் தேவை. இல்லையென்றால், நான் மட்டுமல்ல எங்களது தொண்டர்களும் பேச ஆரம்பித்துவிட்டால், உங்களால் தாக்குப் பிடிக்க முடியாது. அதிமுகவைப் பொறுத்தவரை எல்லோரும் சமம். அனைவருமே பொறுப்பில் இருப்பவர்கள்.
அதிமுக பல திட்டங்களை அறிவித்து அதன்மூலம் மக்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அதிமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்று பட்டியலிட்டுச் சொல்கிறோம். ஆனால், உங்கள் இடத்திலே சரக்கு இல்லை. அதனால் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எனவேதான் அதிமுகவையும், என்னையும் விமர்சனம் செய்கிறீர்கள்.
நான் முதல்வருக்கு சவால் விடுகிறேன். இந்த கோவை மாவட்டம் உழைப்பாளர்கள் நிறைந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் இருந்து சொல்கிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கு தில்லு, திராணி, தெம்பிருந்தால், நீங்களே ஒரு கூட்டத்தைக் கூட்டுங்கள். நீங்கள் உங்களது ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பற்றி பேசுங்கள். நானும் நேரில் வந்து பேசுகிறேன். நீங்கள் எந்த இடத்துக்கு கூப்பிட்டாலும் நான் வரத் தயார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை நாங்கள் கூறுகிறோம்.
நாங்கள் எங்களது ஆட்சியின் சாதனைகளைக் கூறி வாக்குகள் கேட்கிறோம். திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரங்களைப் பரப்பி, எங்கள் மீது பொய்யான குற்றங்களை சுமத்தி, அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள். ஒருபோதும் நடக்காது. தமிழக மக்கள் விழிப்பானவர்கள், அறிவார்ந்த மக்கள், எது சரி எது தவறு என சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றல் படைத்த மக்கள் தமிழக மக்கள். முதல்வர் ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் எல்லாம் ஒன்றும் எடுபடாது.
முதல்வர் ஸ்டாலின் நான் பாஜகவைக் கண்டு பயப்படுவதாக கூறுகிறார். நாங்களா பயப்படுகிறோம். அதிமுக தொண்டன்கூட யாரைப் பார்த்தும் பயப்படமாட்டான். பாஜக மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள கட்சிகள், இந்தியாவில் உள்ள எந்த கட்சியையும் பார்த்து பயப்படாத தொண்டர்கள் அதிமுகவினர். எவருக்கும் நாங்கள் அடிமை கிடையாது. திமுகவைப் போல அடிமையாக நாங்கள் யாருக்கும் இருந்தது கிடையாது.
வெளியிலே வீரவசனம் பேசிவிட்டு உள்ளே சரண்டர் ஆகிறீர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது “Go Back Modi” என்று கூறினீர்கள். கருப்பு பலூன், கருப்புக் கொடி காட்டினீர்கள். ஆளுங்கட்சியாக வந்தபிறகு, “Welcome Modi” என்று கூறுகிறீர்கள். பிரதமரை எத்தனை முறை தமிழகத்து்ககு அழைத்து வந்தீர்கள். அப்பாவும் மகனுமாக 6 முறை தமிழகத்துக்கு பிரதமரை அழைத்து வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கும் ஏற்பாடுகளை செய்தவர்கள் நீங்கள்.
வெளியில் எதிர்ப்பது போன்ற ஒரு தோற்றம். உள்ளே பயம். பிரதமரிடம் சரணாகதி. இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. செஸ், கேலோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க அழைத்து வந்த நீங்களா பிரதமர் மோடியை எதிர்க்கிறீர்கள். அதிமுக அப்படி இல்லை. தமிழக மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்கள் வந்தால் வரவேற்போம், பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் வந்தால், அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT