Published : 04 Apr 2024 08:01 PM
Last Updated : 04 Apr 2024 08:01 PM

“இண்டியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார்?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி

காரமடை பகுதியில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

கோவை: “முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணி என்று பேசுகிறார். இண்டியா கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர்? முதல்வரால் சொல்ல முடியுமா? அவரால் சொல்ல முடியாது. கடந்த 2019-ல் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். காங்கிரஸ் கட்சி அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது” என்று கோவையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில், நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "தமிழகத்தில் நடந்துவரும் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை. இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பான செய்திகள்தான், ஊடகங்களிலும், செய்திதாளிலும் நாள்தோறும் வந்துகொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆட்சியை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியை இருண்ட ஆட்சி என்று கூறுகிறார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் பேசுகின்றனர். நான் பல பகுதிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். அப்படி நான் செல்லும் இடங்களில் பார்க்கும் மக்களிடம் கேட்கும் ஒரே குரல், திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்புவோம் என்பதாக இருக்கிறது. ஆனால், 10 ஆண்டு காலம் நல்ல ஆட்சியைக் கொடுத்ததால், தான் மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தது திமுக. எப்போது பார்த்தாலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் பேசினார். நீட் தேர்வு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. அந்த காலக்கட்டத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும் காங்கிரசும், அதை தடுத்து நிறுத்தப் போராடியது அதிமுக. ஆனால், எங்கு பார்த்தாலும் பொய்யை திரும்பத் திரும்பக்கூறி உண்மையாக்கப் பார்க்கிறார்கள்.

திமுகவினர் இப்படி பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி மக்களிடம் உண்மையை மறைக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணி, இண்டியா கூட்டணி என்று பேசுகிறார். இண்டியா கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர்? முதல்வரால் சொல்ல முடியுமா? அவரால் சொல்ல முடியாது.

2019-ல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தமிழகம் வந்திருந்தனர். அது மக்களவைத் தேர்தல் வரப்போகும் சமயம். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று கூறினார். மிகப் பெரிய ராசியான ஆள் முதல்வர். அவர் அப்படி சொன்னார், அதற்கு முன்புவரை காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைத்து வந்தது. 2019 தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x