Published : 04 Apr 2024 06:58 PM
Last Updated : 04 Apr 2024 06:58 PM
சென்னை: “செங்கலைத் தூக்கி வருவதும், போட்டோவைத் தூக்கி வருவதுமா அரசியல்? இதுவா தேர்தல்? இதுவா தலைவர்களின் அணுகுமுறை? மோடியிடம் எடப்பாடி எப்படி சிரிக்கிறார் பாருங்கள் என்று உதயநிதியும், அப்பாவும் மகனும் பிரதமருடன் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று எடப்பாடியும் பேசுகின்றனர். ஏதோ பற்பசை விளம்பரத்தில் நடிக்க வந்தவர்கள் போல” என்று மத்திய சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் இரா.கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நாம் தமிழர் கட்சி சவால் விடுகிறது. திமுகவும் அதிமுகவும் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு செய்த ஒரே ஒரு நன்மையைச் சொல்லட்டும். நாங்கள் வாக்கு சேகரிப்பதை நிறுத்திவிட்டு அவர்களுக்கே வாக்களித்து விடலாம்.
பாஜக வரும் என்று கூறுவதைவிட்டுவிட்டு, பாஜகவை வரவிடக்கூடாது என்றுதான் அவர்கள் கூற வேண்டும். ஆனால், பாஜக வந்துவிடும் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறிவிட்டு, டெல்லிக்குச் சென்று அப்பா ஒரு காலிலும், மகன் ஒரு காலிலும் மண்டியிட்டுக் கிடப்பது ஏன்? எனவே, திமுகவினர் வாக்கு கேட்டுச் செல்லும்போது தங்களது தத்துவத்தையும், கோட்பாட்டையும் பேச வேண்டும்.
இத்தனை ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளை செய்துள்ளோம் என்று கூற வேண்டும். அவ்வாறு கூற தமிழகத்தில் ஒரு கட்சிக்காவது துணிவு இருக்கிறதா? 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு இத்தனை திட்டங்களை, நன்மைகளை செய்திருக்கிறேன் என்று பாஜக கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? வாய்ப்பே இல்லை.
பாஜக, திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட யாரும் தங்களது சாதனைகள் என்று கூறி வாக்குகளைப் பெற வக்கற்றவர்கள். இவர்கள் அவரை திட்டுவார்கள், அவர்கள் இவரை திட்டுவார்கள், இதைத் தவிர கோட்பாடு என்ன இருக்கிறது. செங்கலைத் தூக்கி வருவதும், போட்டோவைத் தூக்கி வருவதுமா அரசியல்? இதுவா தேர்தல்? இதுவா தலைவர்களின் அணுகுமுறை? மோடியிடம் எடப்பாடி எப்படி சிரிக்கிறார் பாருங்கள் என்று உதயநிதியும், அப்பாவும் மகனும் பிரதமருடன் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று எடப்பாடியும் பேசுகின்றனர். ஏதோ பற்பசை விளம்பரத்தில் நடிக்க வந்தவர்கள் போல. இது எல்லாம் மாறாது மாறாது என்றால் மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும்.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் இந்த தேர்தலிலாவது ஒரு மாறுதலை தேடுங்கள். அநீதிக்கு எதிராக தோன்றிய ஒரு மார்க்கம்தான் இஸ்லாம். திமுக பாவிதான். ஆனால் காவியை ஒழிக்க இந்த பாவிதான் இருக்கிறார். இந்தப் பாவியை வைத்துதான் அந்தக் காவியை ஒழிக்க வேண்டும் என்று இங்கு பலர் கூறுகின்றனர். வேண்டாம், தூய ஆவியாக நாம் தமிழர் கட்சியினர் இருக்கிறோம். எங்களை வைத்து அந்தக் காவியை ஒழியுங்கள்
இன்னும் இவர்களை நம்பிக் கொண்டிருக்கிறீர்களே, சதுரங்க விளையாட்டு விழாவுக்கு மோடி வருவதாக கூறினாரா? அவரை அழைத்து வந்தது யார்? திமுக. சதுரங்க விளையாட்டுக் கூடக் கிடையாது, செஸ். தமிழை வளர்க்கின்றனர். திராவிடம் என்பது சமஸ்கிருத சொல், மாடல் என்பது ஆங்கிலச் சொல். திராவிட மாடல், தமிழ் வாழ்க. எப்படி வாழும். இவர்களை ஒழித்தால், தமிழ் வாழும். தமிழன் ஆண்டால் தமிழ் மீளும்” என்று சீமான் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...