Published : 04 Apr 2024 02:35 PM
Last Updated : 04 Apr 2024 02:35 PM
ஓசூர்: கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் கடந்த கால தேர்தலைப் போலப் பரபரப்பின்றி களையிழந்து காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர். அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் கிராம வாக்காளர்களைக் குறி வைத்து கிராமப் பகுதி தொண்டர்களுடன் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓசூர் மற்றும் தளி சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயில் உக்கிரம் அதிகரித்துள்ளது.
தினசரி 38 முதல் 40 டிகிரி வரை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், பகல் நேரத்தில் சாலைகளில் அனல் காற்று வீசுவதால், மக்கள் நட மாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வெயில் உக்கிரத்தைத் தாக்குப்பிடிக்க முடியாததால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தேர்தல் பிரச்சார திட்டங்களை வகுத்துத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சுவர் விளம்பரம் செய்தல் முதல் பிரச்சாரம் வரையில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளதால், கடந்த கால தேர்தல்களில் இருந்த பரபரப்பும், உற்சாகமும் தற்போதைய தேர்தலில் இல்லை. இதனால், அரசியல் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இத்துடன் வெயில் உக்கிரமும் தேர்தல் பிரச்சாரத்தைக் களையிழக்கச் செய்துள்ளது.
இது தொடர்பாக அரசியல் கட்சி தொண்டர்கள் சிலர் கூறியதாவது: கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே கிராமங்களில் திருவிழா போல தேர்தல் பிரச்சாரம் களைகட்டும். இதற்காக வெளியூர் மற்றும் உள்ளூரில் பணிபுரியும் தொழிலாளர்கள் தேர்தல் முடியும் வரை வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுவோம். கிராம வீதிகளில் கட்சி தோரணங்கள் கட்டி, வேட்பாளர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்போம்.
ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி வாக்கு கேட்டு வலம் வருவோம். தற்போது, தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கடந்த கால தேர்தல் உற்சாகம் தற்போது இல்லை. மேலும், கோடை வெயிலைப் பொருட்படுத்தாமல் தேர்தல் பணியில் ஈடுபடத் தொண்டர்கள் தயாராக இருந்தாலும், பெரும்பாலான வேட்பாளர்களும் ஏசி காரில் வருகிறார்கள், கிராமத்துக்கு வந்தவுடன் பிரச்சார வேனில் ஏறி சிறிது நேரம் வாக்குச் சேகரித்து விட்டு மீண்டும் காரில் ஏறிச் செல்கின்றனர்.
இருப்பினும் வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ‘அனல்’ பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT