Published : 04 Apr 2024 12:49 PM
Last Updated : 04 Apr 2024 12:49 PM

“அம்பானி, அதானிக்காக தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார்” - கனிமொழி @ மதுரை

கனிமொழி

மதுரை: அம்பானி அதானிக்காக தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல விவசாயிகள் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

மதுரையில் சு.வெங்கடேசனை ஆதரித்து வியாழக்கிழமை கனிமொழி எம்.பி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுதியும் பேசியும் வருகிறார் சு.வெங்கடேசன். அவரை இப்பகுதி மக்கள் நிச்சயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பாஜக தொடர்ந்து தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்து வருகிறது. அவர்கள் நம்மை மதிப்பதே கிடையாது.

மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. ஜாப்பானுக்கு சென்று காசு வாங்கி வந்துதான் கட்ட வேண்டுமாம். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக, சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிக விமான நிலையங்கள் இருக்கிறது அதனால் மதுரையை அறிவிக்க முடியாது என தெரிவித்து விட்டனர். அம்பானி அதானிக்காகதான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல விவசாயிகள் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள்.

பாஜகவில் இணைந்துவிட்டால், அனைவரும் குற்றமற்றவர்களாக மாறிவிடுவார்கள். இல்லையென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டு வருவார்கள். காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இரண்டு முதல்வர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். துணை முதல்வர் மாதக் கணக்கில் சிறையில் இருக்கிறார். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீனே கிடைக்கவில்லை.

இப்படி எதிர்க்கட்சிகளை மிரட்டி ஆட்சி செய்யலாம் என நினைக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வரமாட்டார்கள், அப்படி வந்தால் இதுதான் கடைசி தேர்தல். சர்வாதிகாரம் மட்டும்தான் இருக்கும். நமது எதிர்காலத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். தேர்தல் தாள் என்பது இன்னொரு சுதந்திர நாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x