Published : 04 Apr 2024 12:02 PM
Last Updated : 04 Apr 2024 12:02 PM
விழுப்புரம்: விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளரான புகழேந்தி எம்எல்ஏ ஓரங்கப்பட்டு வருவதாகவும், அதற்கு மாற்றாக திமுக தெற்கு மாவட்ட செயலாளராக கௌதம சிகாமணியை நியமிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் ஆகிய நான்கு தொகுதிகளை கடந்த சட்டமன்ற தேர்தலில் தலா 2 தொகுதிகளை அதிமுகவும், திமுகவும் பிரித்துக்கொண்டன. தற்போது விழுப்புரம் மக்களவை தொகுதியில் இந்த 4 தொகுதிகளில் திண்டிவனம் மற்றும் உளுந்துர்பேட்டைதொகுதிகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்தில், போட்டியிட்டு வெற்றிபெற்றார். இத்தேர்தலில் விசிக பானை சின்னத்திலும், அதிமுக இரட்டை இலை சின்னத்திலும், பாமக மாம்பழ சின்னத்திலும் போட்டியிடுகிறது. விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளரான புகழேந்தி உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பை அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி எம்பி எடுத்துக்கொண்டு செயல்படுகிறாரோ என்ற எண்ணம் ஏற்படும் வகையில் 30 ஆம் தேதி விழுப்புரத்தில் விசிக வேட்பாளர் ரவிகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “நம் அமைச்சர் பொன்முடி35 ஆண்டுகள் கலைஞரோடு பயணித்தவர், கலைஞரின் தம்பி, நம் தலைவரின் தளபதி, என் அரசியல் வழிகாட்டி, அவர் இல்லையென்றால் நான் கிடையாது.
அவருக்கு கௌதம சிகாமணி எப்படி ஒரு பிள்ளையோ, அப்படி நானும் ஒரு பிள்ளை. அதனால்தான்நான் என் உடன்பிறவா சகோதரர் கௌதம சிகாமணி என்று சொன்னேன். எந்தநேரத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டோம். தலைவரும் அமைச்சர் பொன்முடியையும், கௌதம சிகாமணியையும் எக்காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்கமாட்டார்” என்று பேசினார். அப்போது கூட மாவட்ட செயலாளரான புகழேந்தி பெயரை உச்சரிக்கவில்லை.
இது குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியை குறிவைத்துதான் கள்ளகுறிச்சியில் திமுக சார்பில் கௌதம சிகாமணி எம்பி போட்டியிட பொன்முடி விரும்பவில்லை. தற்போதே உளுந்தூர்பேட்டை தொகுதியில் எம்எல்ஏ மணிக்கண்ணனை ஓரங்கட்டிவிட்டு, உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவர் வைத்தியநாதனையும், விழுப்புரம் தொகுதியை கௌதம சிகாமணி பொறுப்பிலும், விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், வானூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜூம் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் பொன்முடியின் ஆதரவாளர்கள். விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணனுக்கு தேர்தல் தொடர்பான எவ்வித பொறுப்பும் கொடுக்கவில்லை. எனவே ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு பின் மாவட்டச் செயலாளராக கௌதம சிகாமணி நியமிக்க வாய்ப்பு அதிகம்" என்றனர்.
கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி, வேலைவாய்ப்பில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “முதலில் திமுகவில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும். பின்னர் உள் ஒதுக்கீடுப் பற்றி பேசலாம்” என்றார்.
இதையடுத்து விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக கடந்த 2020 செப்டம்பர் 17 ஆம் தேதி மாவட்டச் செயலாளர் பதவிக்கு அப்போதைய மாவட்ட அவைத்தலைவர் புகழேந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியிடமிருந்த மாவட்டச் செயலாளர் பதவி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து திமுகவில் இருக்கும் புகழேந்திக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT