Last Updated : 04 Apr, 2024 10:10 AM

1  

Published : 04 Apr 2024 10:10 AM
Last Updated : 04 Apr 2024 10:10 AM

விளவங்கோடு இடைத்தேர்தல் களம் எப்படி? - ஒரு பார்வை

தாரகை கத்பர்ட், நந்தினி, ராணி, ஜெமினி

பெண் வேட்பாளர்கள் மட்டுமே களம் காணும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தனது கோட்டையைத் தக்க வைக்க, பாஜகவுடன் கடும் போட்டியை எதிர்கொள்கிறது காங்கிரஸ் கட்சி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் இணைந்து, பதவியை ராஜினாமா செய்ததால் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலோடு ஏப்.19-ல் வாக்குப்பதிவு நடக்கிறது.

கேரள எல்லைக்கு அருகிலுள்ள இத்தொகுதியில், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இதுவரை நடைபெற்றுள்ள 15 சட்டப்பேரவை தேர்தல்களில் இத்தொகுதியில் 10 முறை காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. 5 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது.

கடந்த 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதரணி தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு முன்பாக காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சுந்தரதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.மணி ஆகியோரும் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய இடைத்தேர்தலில் சுயேச்சைகள் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இதில் முக்கிய 4 கட்சிகளும் பெண் வேட்பாளர்களையே களம் இறக்கியுள்ளன.

காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, சமீபத்தில் மைலோடு கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி நாம் தமிழர் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 87,473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ஜெயசீலன் 58,804 வாக்குகளைப் பெற்று 2-வது இடம் பெற்றார். தனது கோட்டையைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சி தற்போது தீவிரமாக தேர்தல் பணி செய்து வருகிறது.

அத்துடன் ரப்பர் தொழில் பூங்கா அமைத்தல், தேன் ஆராய்ச்சி மையம் அமைத்தல், தேனுக்கு அரசின் விலை நிர்ணயம் செய்தல், மீன் வர்த்தகத்தை மேம்படுத்துதல் போன்றவை இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

பல தரப்பட்ட சமூகத்தினரும் இத்தொகுதியில் பரவலாக வசித்தாலும், கட்சிகளைத் தாண்டிய மத ரீதியான அரசியல் இங்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குகிறது. இத்தொகுதியை இதுவரை வென்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியாக இருப்பதால் மீண்டும் தங்களுக்கே வெற்றி என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி உள்ளது.

அதேநேரம் பாஜகவுக்கும் இங்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளதால் அவர்களது பிரச்சாரமும் களைகட்டியுள்ளது. சொந்த செல்வாக்கில் களம்காண்கிறது அதிமுக. நாம் தமிழர் கட்சியோடு சேர்ந்து 4 முக்கிய போட்டியாளர்கள் இருந்தாலும், காங்கிரஸ் பாஜக இடையேயான மோதலே கவனத்தை ஈர்க்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x