Published : 04 Apr 2024 04:32 AM
Last Updated : 04 Apr 2024 04:32 AM
சென்னை: பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரதமர் மோடி 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரத்துக்கு 2 வாரங்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்துக்கு 5 முறை வந்த பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், பாஜக பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். அந்த வகையில், சென்னை, கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோடி, கடந்த மாதம் கோவையில் நடந்த பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’விலும் பங்கேற்றார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 9, 10, 13, 14-ம் தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழகத்துக்கு 9-ம் தேதி வரும் பிரதமர் மோடி, அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் செய்கிறார். தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி மற்றும் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆரணி, சிதம்பரம், கடலூர் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.
அன்று மாலை 6 மணிக்கு தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகரில் ‘ரோடு ஷோ’ மூலம் மோடி பிரச்சாரம் செய்கிறார். அப்போது, மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மற்றும் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் தொகுதி பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.
10-ம் தேதி காலை 11 மணிக்கு நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து, கோவையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று,கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
13-ம் தேதி காலை 11 மணிக்கு பெரம்பலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
14-ம் தேதி காலை 11 மணிக்கு விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விருதுநகர் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அந்த வகையில் 4 நாட்களில் 3 ‘ரோடு ஷோ’, 3 பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...