Published : 25 Apr 2018 10:28 AM
Last Updated : 25 Apr 2018 10:28 AM
‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவை மூலம் வாசகர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இன்று நடக்கவிருந்த சிறுமி யின் திருமணம் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.
‘விருத்தாசலம் மணவாளநல்லூரில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடக்க இருக்கிறது. அதை தடுத்து நிறுத்துங்கள்’ என்று ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவை மூலம் ஒரு வாசகர் கடந்த மார்ச் 8-ம் தேதி தகவல் அளித்தார்.
இதையடுத்து, அவர் குறிப்பிட்ட பகுதியில் ‘தி இந்து’ குழு விசாரணையில் இறங்கியது. அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவிக்கும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளைஞருக்கும் ஏப்ரல் 25-ம் தேதி (இன்று) திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனே இதுபற்றி சமூகநலத் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். சமூகநலத் துறை அலுவலர் ஜெயபிரபா, மற்றொரு அலுவலருடன் சிறுமி யின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதில், அந்தச் சிறுமி விருத்தாசலம் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவதும், பொதுத் தேர்வு முடிந்த பிறகு, திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சமூகநலத் துறை அலுவலர்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று, சான்றிதழ் மூலம் சிறுமியின் வயதை உறுதி செய்தனர். சிறுமி பொதுத்தேர்வு எழுத உள்ள நேரத்தில் விசாரணை நடத்தினால், மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தேர்வு முடிந்த பிறகு விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி, கடந்த 16-ம் தேதி தேர்வு முடிந்த நிலையில், சிறுமி யின் வீட்டுக்குச் சென்ற சமூகநலத் துறை அலுவலர்கள் சிறுமியிடமும், அவரது பெற்றோரிடமும் பேசினர்.
உளவியல் ஆலோசனை
சமூகநலத் துறை அலுவலர் மூலம் உளவியல் வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. 18 வயது நிரம்பாத நிலையில், திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று எடுத்துக் கூறி, திருமணத்தை நடத்தக் கூடாது என அறிவுறுத்தினர். அதற்கு சிறுமியின் தாய் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர், அரசியல் பிரமுகர்கள் மூலம் சமூகநல அலுவலர்களை மிரட்டும் தொனியில் பேசினார். ‘மிரட்டுபவர்கள் குறித்து ஆட்சியரிடம் புகார் செய்யப்படும்’ என சமூகநலத் துறை அலுவலர்கள் கூறியதும், அவர்கள் பின்வாங்கினர்.
இதையடுத்து சிறுமியும் பெற்றோரும் கடலூரில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மீண்டும் உளவியல் கலந்தாய்வு அளிக்கப்பட்டது. சிறார் திருமணத்தால் ஏற்படும் மன, உடல் ரீதியான பாதிப்புகளை மருத்துவர்கள் எடுத்துக் கூறியதும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, சிறுமிக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT