Published : 27 Apr 2018 08:58 PM
Last Updated : 27 Apr 2018 08:58 PM

மகனின் படிப்புச்செலவுக்கு இருந்த ஒரே ஆதாரத்தையும் பறித்துச்சென்றனர்: செயினை பறிகொடுத்த பெண் உருக்கம்

அயனாவரத்தில் செயின் பறிப்பாளர்களிடம் நகையை பறிகொடுத்த பெண், தனது மகனின் படிப்புச்செலவுக்காக வைத்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்துச்சென்றுவிட்டார்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

சென்னையில் செயின் பறிப்பு வாடிக்கையான நிகழ்வாக மாறிவருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த நிகழ்வுகள் இன்று தினசரி ஏழெட்டு சம்பவங்கள் சென்னையில் நடக்கும் அளவுக்கு மாறிபோனது. வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையில் வாழ்நாள் சேமிப்பாக வைத்திருக்கும் பெண்களிடம் நகையைப் பறிக்கின்றனர்.

நகையை பறிகொடுக்காமல் இருக்க போராடும்போது கீழே விழுந்து காயம்பட்டு உயிரிழக்கும் பெண்கள், பொருள் போனாலும் பரவாயில்லை மனைவியை இழந்துவிட்டேனே என்று கதறும் கணவன் என செயின் பறிப்பிற்கு பின்னால் உள்ள சோகம் சொல்லி மாளாது.

இரண்டு நாட்களுக்கு முன் நெல்லையில் கணவருடன் சுபநிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முகவரி கேட்ட ஒரு நபருக்கு உதவி செய்ய முகவரியை கூறியபோது அவரது கழுத்திலிருந்த அந்த நபர் செயினை பறிக்க முயல செயினை பிடித்துக்கொண்டு போராடிய பெண் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததில் கழுத்து நரம்பு துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிய கணவரின் கண் முன்னே நடந்த நிகழ்வு ஒரு குடும்பத்தின் அத்தனை கனவுகளையும் சிதைத்து விட்டது. போதைப்பழக்கத்துக்கும், ஆடம்பர செலவுக்கும் பறிக்கப்படும் செயின்கள் பாதிக்கப்படும் பெண்ணின் குடும்பத்தின் சந்தோஷத்தையும் சேர்த்து பறித்துச்செல்கிறது.

சாதாரண நடுத்தர குடும்பத்து பெண்கள் சிறுக சிறுக சேமித்து வாங்கும் நகைகள் அவர்கள் ஆசைப்பட்டு போட வேண்டும் என்று வாங்கப்படுவதில்லை. அவர்களை கேட்டால் சொல்வார்கள் என் மகனின் படிப்புச்செலவுக்கு உதவும், என் மகளின் கல்யாண செலவுக்கு உதவும், திடீர் என பெரிய செலவு வந்தால் என்ன செய்வது அதற்காகத்தான் நகைகளை சேமிக்கிறேன் என்பார்.

அப்படி பிள்ளைகளின் படிப்புச்செலவு, மகளின் திருமணம், திடீர் மருத்துவச்செலவு போன்ற காலம் வரை அவர்கள் கழுத்தையோ காதையோ அலங்கரிக்கும் நகைகளை நொடிப்பொழுதில் கொள்ளையர்கள் பிடுங்கிச் செல்கின்றனர். இப்படிப்பட்ட சோக நிகழ்வுக்கு ஆளானவர் தான் அயனாவரத்தை சேர்ந்த தனலட்சுமி.

சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவில் ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவரது கணவர் மோகன். இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். ஒரே மகன், சாதாரண வருவாய் உள்ள கணவன் என குடும்பத்தை தள்ளும் தனலட்சுமியின் ஒரே நம்பிக்கை மகன் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் குடும்ப பாரம் தீரவேண்டும் என்பதே. ஒருவர் மட்டுமே சம்பாதித்தால் குடும்பத்தை தள்ள முடியாது என்பதால் தானும் வீட்டு வேலைக்கு போக ஆரம்பித்தார்.

சொற்ப வருமானம், பக்கத்து தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை, காலையில் சென்றால் மதியம் வீடு திரும்புவார். சிறுக சிறுக சேர்த்து மூன்று சவரனில் தாலியும், இரண்டரை சவரனில் செயினும் வாங்கி கழுத்தில் போட்டிருந்தார். இந்த ஆண்டு பள்ளி துவங்கும் நேரத்தில் மகனின் படிப்புச்செலவு, யூனிபார்ம் மற்ற செலவுகளுக்கு செயினை அடகு வைத்து செலவு செய்ய நினைத்திருந்தார்.

ஏப் 24-ம் தேதி வழக்கம் போல் குடியிருப்பில் வீட்டுவேலையை முடித்துக்கொண்டு களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் தனலட்சுமி. சில நிமிடங்களில் வீடு திரும்பிவிடலாம் ஆனால் அதற்குள் சாலையை அடைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்த ஆட்டோவை கடக்க நடுச்சாலைக்கு வர அதற்கென்றே காத்துக்கொண்டிருந்த செயின் பறிப்பு கொள்ளையர்கள் நொடிப்பொழுதில் அவரது கழுத்திலிருந்த 5.5 சவரன் தாலி மற்றும் செயினை பறித்துச்சென்றனர்.

சாலையில் போன யாருமே அவருக்கு உதவாத நிலையில் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் தனலட்சுமி. 5.5 சவரன் இனி அவர்களால் வாழ்நாளில் வாங்க முடியாத ஒன்று. இனி பறிபோன செயின் திரும்ப கிடைக்குமா? மகனின் பள்ளிச்செலவுக்காக நம்பி இருந்தேன், இந்த ஆண்டு எப்படி அவனது படிப்புச்செலவை சமாளிக்க போகிறேன் என்று தனலட்சுமி பரிதாபமாக கேட்டது செயின் பறிப்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் குரலாக உள்ளது.

சென்னையை மிரட்டும் சங்கிலிப்பறிப்பு கொள்ளையர்களால் அண்மையில் பாதிக்கப்பட்டவர் அயனாவரத்தைச் சேர்ந்த தனலட்சுமி. தனது மகனின் படிப்புக்காக சமையல் வேலை செய்யும் தனலட்சுமி கொள்ளையர்களால் இன்று தனது தங்கச் சங்கிலியை பறிகொடுத்து தவித்து நிற்கிறார்.

அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சமையல் வேலை செய்யும் தனலட்சுமி, காலை 7 மணிக்கு வேலைக்குச் சென்றால் நண்பகலில் தான் வீடு திரும்ப முடியும். வழக்கம் போல் ஏப்ரல் 24-ம் தேதி பிற்பகல் ஒருமணி அளவில் சமையல் வேலையை முடித்துவிட்டு அயனாவரம் கே.ஹெச்.சாலையில் தனலட்சுமி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் நின்ற ஆட்டோவின் பின்னால் வாகனத்தில் அமர்ந்தபடி மறைந்திருந்த இருவர், தனலட்சுமி அருகே வந்ததும் நொடிப்பொழுதில் அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால் தனலட்சுமி அலறியடித்தபடி கதறினார். இருப்பினும் அவரால் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல்போனது. கொள்ளையர்கள் நகைளுடன் தப்பிச் சென்றுவிட்டனர்.

தனலட்சுமியை தொடர்ந்து சங்கிலியை இழந்தவர்கள் பட்டியலில் இணைகிறார் ஐ.சி.எப். வடக்கு காலனியைச் சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள். ஏப்ரல் 25-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சாலையில் நடந்து சென்ற போது குப்பம்மாள் அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

அதிகரிக்கும் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் பகலிலேயே அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலையில் இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x