Published : 04 Apr 2024 04:08 AM
Last Updated : 04 Apr 2024 04:08 AM
திருச்சி: இண்டியா கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மற்றும் பெரம்பலூர் காமராஜர் வளைவு ஆகிய இடங்களில் பேசியது:
அருண் நேருவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், நான் மாதந்தோறும் 2 நாட்கள் இங்கு வந்து தங்கி, உங்களுக்குத் தேவையான திட்டங்களை அறிந்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருவேன். பெரம்பலூர், பாடாலூர் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரும் பணிகள், ரூ.50 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், காலை உணவுத் திட்டம் கனடாவிலும் செயல்படுத்தப் பட்டுள்ளது. உலகில் உள்ள பல நாடுகள் திமுக அரசின் திட்டங்களை பின்பற்று கின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள சிறிய குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள 1.60 கோடி மகளிருக்கு நிச்சயம் உரிமைத் தொகை வழங்கப்படும்.
குஜராத்தில் கடந்த ஆண்டு மழை பெய்த மறுநாளே ஓடிச் சென்று அந்த மாநில முதல்வர் கேட்காமலேயே பிரதமர் மோடி நிவாரணத் தொகை வழங்கினார். ஆனால், தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக கடந்த ஆண்டு ரூ.37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டும், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்க வில்லை. கடந்த 2021 தேர்தலில் அடிமைகளை விரட்டி அடித்தீர்கள். அதேபோல, இந்தத் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும் என்றார்.
கமல்ஹாசன் பிரச்சாரம்: திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பெரம்பலூரில் மநீம தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் இரவு பேசியது: நமது நாட்டை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனியை துரத்திவிட்டு நிம்மதியாக இருந்தபோது, புதிய மேற்கிந்திய கம்பெனி ( குஜராத் ) திடீரென வந்து நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி செய்த அனைத்து தவறையும் புதிய மேற்கிந்திய கம்பெனி செய்கிறது. அந்த கம்பெனியை விரட்ட, அருண் நேருவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT