Published : 03 Apr 2024 09:32 PM
Last Updated : 03 Apr 2024 09:32 PM
சிதம்பரம்: “ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் தம்பி திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கிறோம். இந்த முறை பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள். நாங்கள் வீரர்கள் களம் கண்டே ஆக வேண்டும்” என்று சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதன்கிழமை சிதம்பரம் மேலரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் தம்பி திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கிறோம்.
இந்த முறை பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள். நாங்கள் வீரர்கள்... களம் கண்டே ஆக வேண்டும். என் கட்சிக்காரர்கள் என்ன அண்ணே, இந்த முறை தியாகம் செய்துவிட்டீர்களே என்று கூறுகின்றனர். இது தியாகம் அல்ல வியூகம். திருமாவளவனுக்கும் அதே பிரச்சினை வந்தது. எத்தனை ஆண்டுகளாகத்தான் இரண்டு இடங்கள், மூன்று இடங்கள் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால், அது அல்ல இப்போதைய தேவை.
களம் காண வேண்டியதே தேவை. அதற்காகத்தான் திருமாவளவனும் வந்திருக்கிறார். நானும் வந்திருக்கிறேன். நல்லவேளை அரசியலுக்கு வந்ததற்காக, 25 ஆண்டுகள் கழித்து தாமதமாக நன்றி கூறுகிறேன். ஆனால் திருமாவளவன் வந்தே ஆக வேண்டும். அதை புரிந்துகொண்டதால்தான், மக்களின் தேவை, சேவையை அறிந்து அன்றே அரசியலுக்கு வந்தவர் திருமாவளவன். அவருக்கும் இன்று தாமதாக நன்றி கூறுகிறேன்.
அவரை தனிப்பட்ட முறையில் நான் பலமுறை பாராட்டியிருக்கிறேன். திருமாவளவனுக்கு 60 வயதாகும்போது, திருமாமணி என்ற மலரை வெளியிட்டனர். அந்த மலரில் என்னுடை கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. அதில் நான் அவரை, தன்நிகரில்லா தன்நேரில்லா தமிழர் என்று ஒரு தலைப்பைக் கொடுத்திருந்தேன். இன்றும் தூக்கத்தில் எழுப்பி திருமாவளவன் குறித்து கேட்டால் அந்த வாக்கியம்தான் நினைவில் ஓடும்.
நான் கூறியபடி, மானுட சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்படும் போதெல்லாம், தனது அர்ப்பணிப்பு தேவை என்று உணர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் திருமாவளவன். தாழ்த்தப்பட்டவர் என்ற வரிசையில் யார் இருந்தாலும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர் இவர். தன் நேரில்லா தமிழர் பெருஞ்சிறுத்தை என் தம்பி திருமாவளவன். இவரது ஆற்றல்மிக்க பேச்சும், ஞானமும் என்னை என்றும் கவர்ந்திருக்கிறது” என்று கமல்ஹாசன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT