Published : 03 Apr 2024 04:24 PM
Last Updated : 03 Apr 2024 04:24 PM
சென்னை: “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இவிஎம் இயந்திரம் மீது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், நியாயமான சந்தேகம் வந்திருக்கிறது. இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்தகால நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மக்களவைத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வேட்பாளர் வேணுகோபால், ஏறத்தாழ 200-250 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்று, 5 ஆண்டு காலம் எம்.பியாகவும் அவர் இருந்தார். அதேபோல கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில், விசிக தலைவர் திருமாவளவன் 3000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.
எனவே, 46,000 வாக்குகள் வரை தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. எனவே, அந்த குறை திருத்தப்பட வேண்டும், என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் வலியுறுத்தி இருக்கிறோம். ஆனால், தேர்தல் ஆணையத்திடம் இருந்து அது தொடர்பாக உரிய பதில் வரவில்லை. இந்த குறை தேர்தலுக்கு முன்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
இன்னும் வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்கும் எண்ணப்படும்போது, படிவம் 17-சி அதாவது, ஒவ்வொரு ஏஜென்டும் இந்த படிவத்தில் டிக் செய்வார்கள். இதன்மூலம் எவ்வளவு வாக்குப் பதிவானது என்பது தெரியும்.
ஒரு வாக்குச்சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவானது என்பது அந்த படிவம் 17-சி-ல் இருக்கும். ஆனாலும், வாக்கு எண்ணப்படும்போது ஒரு 50 முதல் 60 வாக்குகள் வித்தியாசம் வரும். 17-சி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருக்கும். இதனால், ஏஜென்ட்கள் இடையே பிரச்சினை வரும்.
இதற்கு தேர்தல் ஆணையம் மாதிரி வாக்குப் பதிவின்போது பதிவு செய்யப்பட்டதாக கூறி, அந்த வாக்குகளை கழித்துவிடுவதாக கூறுவர். ஆனால், இதிலும் பல தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடைந்துள்ள போது, தேர்தல் ஆணையம் ஏன் இந்த தவறுகளை நிவர்த்தி செய்யவில்லை. இதனால்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இவிஎம் இயந்திரம் மீது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், நியாயமான சந்தேகம் வந்திருக்கிறது. இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
உச்ச நீதிமன்றத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்கூட, நூற்றுக்கு நூறு விவிபேடில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கிலும் அதைத்தான் கேட்டுள்ளோம் . இதுபோன்ற முரண்பாடுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும். முறையாக தேர்தல் நடைபெற்று நியாயமான முடிவுகள் வரவேண்டும்.
இந்த இவிஎம் இயந்திரங்கள் தயாரிக்கப்படுகிற இடத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்று மிகப் பெரிய சந்தேகமாக இருந்து வருகிறது. இயந்திரங்கள் தயாரிக்கும் இடத்துக்கு பாஜகவைச் சேர்ந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் நிவர்த்தி செய்வதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்தகால நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT