Published : 03 Apr 2024 11:45 AM
Last Updated : 03 Apr 2024 11:45 AM
சென்னை: "பலருக்கும் உங்களது தலைமைத்துவம் உத்வேகமாக அமைந்துள்ளது." என்று கூறி மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தேர்வான மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், "அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங், 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நாட்டுக்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, அறிவாற்றல் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய கலவையான செயல்பாடுகள் மூலமாக கட்சிகள் கடந்து மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். சவாலான காலங்களில் நான் உட்பட பலருக்கும் உங்களது தலைமைத்துவம் உத்வேகமாக அமைந்துள்ளது.
இந்திய ஒன்றியத்துக்கும், மக்களுக்கும் மகத்தான பங்களிப்பு செய்த பெருமிதத்துடன் உங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எதிர்க்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என திமுக சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன்.
உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்." என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT