Published : 03 Apr 2024 11:25 AM
Last Updated : 03 Apr 2024 11:25 AM
பாஜக சார்பில் நடிகை ராதிகா, அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால் விருதுநகர் மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. 1977-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார் எம்ஜிஆர்.
முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர், இந்த மாவட்டத்துக்குட்பட்ட சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 1971, 1977-ல் ஜெயலட்சுமி (காங்கிரஸ்), 1980, 1984-ல் சவுந்தர்ராஜன் (அதிமுக), 1989-ல் காளிமுத்து (அதிமுக), 1991-ல் கோவிந்தராஜுலு (அதிமுக), 1996-ல் அழகிரிசாமி (சிபிஐ), 1998, 1999-ல் வைகோ (மதிமுக), 2004-ல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் (மதிமுக), 2009-ல் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), 2014-ல் டி.ராதாகிருஷ்ணன் (அதிமுக), 2019-ல் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர், அருப்புக்கோட்டையில் திமுக, சாத் தூரில் மதிமுக, சிவகாசியில் காங்கிரஸ், திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் அதிமுக வெற்றி பெற்றன.
2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் கண்டன. அப்போது, அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனும், திமுக வேட்பாளரான மதுரையைச் சேர்ந்த ரத்தினவேலுவும் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.
2019-ல் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தேமுதிக வேட்பாளர் 3.50 லட்சம் வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவரைவிட 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3,23,160 வாக்காளர்கள், திருமங்கலம்- 2,77,311, சாத்தூர்- 2,29,837, சிவகாசி- 2,30,997, விருதுநகர்- 2,15,529, அருப்புக்கோட்டை- 2,14,861 என மொத்தம் இந்த மக்களவைத் தொகுதியில் 14,91,695 வாக்காளர்கள் உள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா, நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் உட்பட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
விருதுநகர் தொகுதியில் 2009, 2019 ஆகிய 2 முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார். தொகுதியில் பல்வேறு இடங்களில் தேர்தல் பணிமனைகளை திறந்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த முறை தான் செய்த பணிகளை 400 சாதனைகள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
தேமுதிகவின் நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் மகன் என்ற அடையாளத்தோடு களமிறங்கியிருக்கும் விஜய பிரபாகரன், கூட்டணி கட்சியான அதிமுகவினரின் உதவியோடு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானு ஜபுரம் இத்தொகுதிக்குள் வருவதால் கூடுதல் உற்சாகத்தோடு வாக்குகளை சேகரித்து வருகிறார்.
பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா, அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் வாக்காளர்களை எளிதில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். பல்வேறு சமூகத் தலைவர்களையும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளையும், பள்ளிவாசல்களுக்குச் சென்று ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து வாக்கு சேகரிப்பதோடு மக்களை சந்தித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு உறுதுணையாக அவரது கணவரும், நடிகருமான சரத்குமாரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கவுசிக், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரத்துக்குப் பின்பு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். நான்கு முனை போட்டி நிலவி வந்தாலும், மாணிக்கம் தாகூர், ராதிகா, விஜய பிரபாகரன் ஆகியோருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
நீண்டகால கோரிக்கைகள்: பட்டாசுத் தொழிற்சாலைகளையும், அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படாமல், வகுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பாதுகாப்பில்லாத தொழில் என்பதால் தீக்குச்சி உற்பத்தி தொழிலும் சரிந்து வருகிறது. தீப்பெட்டிகளை மடக்கி ஒட்டுதல், குச்சிகளை அடுக்கிவைத்தல் போன்ற பணிகள் குடிசைத் தொழிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தொழிலின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்தும் எவ்வித திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் கொடுக்கின்றன. ஆனால், மாவட்டத்திலுள்ள 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் பல தூர்வாரப்படாமலும், கரைகள் உயர்த்தப்படாமலும் இருக்கின்றன.
அவற்றை சரிசெய்தாலே நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்கச் செய்து குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு ஈடுகட்ட முடியும். ஆனால் இதற்கான திட்டங்களை எந்த அரசும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கம். அதோடு, விருதுநகர் தொகுதியில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை முழுமையாக நிறைவேற்றி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT