Published : 03 Apr 2024 11:16 AM
Last Updated : 03 Apr 2024 11:16 AM
புதுச்சேரி: மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்தில் காங்கிரஸை இடதுசாரிகள் எதிர்ப்பதால் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால் தமிழகத்தையொட்டி அமைந்துள்ளன. ஏனாம் ஆந்திரத்தையொட்டியும், மாஹே கேரளத்தையொட்டியும் உள்ளது. நான்கு பிராந்தியங்களும் இணைந்தது தான் புதுச்சேரி மக்களவைத் தொகுதியாகும். புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட பல கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளருக்கு மாஹே பிராந்தியத்தில் உள்ள இடதுசாரி தலைவர்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரித்ததில், கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதனால் கேரளத்தில் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தை ஒட்டி உள்ள மாஹே பிராந்தியத்திலும் இத்தாக்கம் எதிரொலிக்கிறது. புதுச்சேரியில் இடதுசாரிகள் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரமும் செய்கின்றனர். மாஹேயில் உள்ள இடதுசாரிகள் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்காமல் பிரச்சாரமும் செய்யாமல் சுயேட்சைக்கு வாக்களிக்க முடிவு எடுத்துள்ளனர்.
இது பற்றி மாஹே இடதுசாரிகள் தரப்பில் கூறுகையில், "இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்கிலிங்கத்துக்கு பிரச்சாரம் செய்யவும் வாக்களிக்கவோ இங்குள்ள தொழிலாளர்கள் விரும்ப மாட்டார்கள். இதை புதுச்சேரியில் உள்ள கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டோம். நாங்கள் கேரளம் கண்ணூர் மாவட்ட செயலகத்தில் இணைந்துள்ளோம். கடந்த மக்களவைத் தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கத்துக்கு ஆதரவு தரவில்லை.
அப்போது மக்கள் நீதி மையம் வேட்பாளரை தான் ஆதரித்தோம். இம்முறையும் காங்கிரசுக்கு வாக்களிக்க முடியாது. பிரச்சாரம் செய்ய முடியாது. ஏனெனில் இது கேரளாவில் உள்ள காங்கிரஸ் உடன் எங்கள் மோதலை நீர்த்துப் போக செய்யும். அதனால் நாங்கள் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்போம்" என்று தெரிவித்தனர்.
இதுபற்றி புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் கூறுகையில் "மாஹே நிலவரத்தை கட்சி தலைமை அறிந்து உள்ளது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்க கட்சி தலைமை வழிவகை செய்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் கூறுகையில், "கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் எதுவும் செய்யக்கூடாது. வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாஹேயில் முயற்சிகள் எடுப்போம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT