Published : 03 Apr 2024 06:06 AM
Last Updated : 03 Apr 2024 06:06 AM

சென்னை - மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் ஏப்.5 முதல் இயக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே வழக்கமான வந்தேபாரத் ரயில் சேவை ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி வைத்தார். இருப்பினும், இந்த ரயில் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வாரத்தில் 6 நாட்களில் (புதன் தவிர) மாலை5 மணிக்கு வந்தே பாரத் ரயில்(20664) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.15 மணிக்கு பெங்களூருவை அடைகிறது.

மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து காலை 7.50 மணிக்கு வந்தே பாரத் ரயில் (20663) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது. இந்நிலையில், இந்த ரயிலின் வழக்கமான சேவை ஏப்.5-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை - மைசூரு இடையே தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில், ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும். அதன்பிறகு, சென்னை - மைசூரு இடையே வழக்கமான வந்தே பாரத் ரயில்சேவை தொடங்குகிறது.

மைசூருவில் இருந்து காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12.25 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11.20 மணிக்கு மைசூரு சென்றடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வியாழக்கிழமை பராமரிப்பு: தற்போது இயக்கப்படும் வந்தேபாரத் ரயில் வாரத்தில் புதன்கிழமைதவிர மற்ற நாட்களில் இயக்கப்படுகிறது. அன்றைய தினம் வந்தே பாரத் ரயிலின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது, இந்த நாள் மாற்றப்பட்டு, வாரத்தில் வியாழக்கிழமை அன்று ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் ரயில் சேவை கிடையாது. இந்த மாற்றம் ஜூலை 30-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x