Published : 22 Apr 2018 08:43 AM
Last Updated : 22 Apr 2018 08:43 AM
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சர்ச்சைக்குரிய தனியார் கல்லூரியில் 2 மூத்த பேராசிரியர்கள் 2 தினங்களுக்கு முன்பு திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தைத் தொடர்ந்து, அவர் பணியாற்றி வந்த அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், மூத்த பேராசிரியருமான இசக்கிதுரை, வரலாற்றுத்துறைத் தலைவரும் மாணவர் கூட்டமைப்பின் கன்வீனருமான மூத்த பேராசிரியை பூவை ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு, கல்லூரி நிர்வாகத்திடம் அளித்த கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது, கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிசிஐடி தனிப்படை ஒருபுறம் குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவினரும், கல்லூரி கல்வி இணை இயக்குநர் கூடலிங்கம் தலைமையிலான உயர்கல்வித்துறை அதிகாரிகளும் கல்லூரியில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெருங்கிய தொடர்பு
அதில், கல்லூரி நிர்வாகத்தில் தொடர்ந்து நடந்துள்ள விதிமுறை மீறல்கள், நிர்வாகக் கோளாறுகள் போன்றவற்றை பேராசிரியை நிர்மலாதேவி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, “பேராசிரியை நிர்மலாதேவிக்கு, இக்கல்லூரியின் முன்னாள் நிர்வாக்குழுவில் இருந்த குறிப்பிட்ட சிலருடனும், தற்போது நிர்வாகக் குழுவில் உள்ள சிலருடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
பல ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகத்தில் ஏற்பட்டு வந்துள்ள குழப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முந்தைய நிர்வாகத்திலும், தற்போதைய நிர்வாகத்திலும் தனது ஆளுமையை நிலைநிறுத்தி வந்துள்ளார் நிர்மலாதேவி. முந்தைய நிர்வாகக்குழுவில் கல்லூரி முதல்வராக ரவிக்குமார் இருந்துள்ளார். அப்போது, பல லட்சம் ரூபாய்க்கு மோசடிகள் நடந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அண்மையில் அவர் மீண்டும் பணிப் பொறுப்பேற்ற தினத்தன்றே மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.
காரியம் சாதிப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டதும், தொடர்ந்து நிர்வாகம் 2 குழுக்களாக இருந்து போட்டி போட்டதால் கடந்த 2016-ல் இக்கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது, கல்லூரி நிர்வாகக் குழுவினருடன் மட்டுமின்றி, பல்கலைக்கழகத்தில் சில முக்கிய நபர்களிடமும் பேராசிரியை நிர்மலாதேவி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், கல்லூரி நிர்வாகம் மீண்டும் நிர்வாகக்குழுவிடம் வந்துள்ளது. கல்லூரி நிர்வாகமும் பேராசிரியை நிர்மலாதேவி மூலம் பல்கலைக்கழகத்தில் பல காரியங்களை சாதித்து வந்துள்ளது.
கல்லூரியில் பருவத் தேர்வு கடந்த டிசம்பரில் நடத்தப்பட்டு ஜனவரியில் முடிவு வெளியிடப்பட்டது. கல்லூரி வலைதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், நிர்மலாதேவி வகுப்பு எடுத்த முதுகலை பட்டம் பயிலும் மாணவிகளில் 10 பேர் தோல்வி அடைந்தனர். தேர்வுத்தாள் திருத்தப்பட்டபோதும், முடிவுகள் வெளியானபோதும் நிர்மலாதேவி விடுமுறையில் சென்றுள்ளார்.
தேர்வு முடிவுகள் திருத்தம்
தனது வகுப்பு மாணவிகள் 10 பேர் தேர்வில் தோல்வியடைந்ததை அறிந்த நிர்மலாதேவி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியின் நடவடிக்கைகளை மீறி, கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அனுமதிபெற்று, தேர்வு முடிவுகள் வெளியான நிலையிலும், குறிப்பிட்ட 10 மாணவிகளின் விடைத்தாள்களை மீண்டும் திருத்தி அவர்களை தேர்ச்சி அடைய வைத்துள்ளார். அதன்பின், கல்லூரி தேர்வு முடிவுகள் திருத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு பேராசிரியர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதோடு, மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக வெளியான ஆடியோ குறித்து, மாணவர் கூட்டமைப்பினர், பேராசிரியர்கள் என பலர் ஒன்று சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதனால், சில மூத்த பெண் பேராசிரியைகளுக்கும் நிர்மலாதேவிக்கும் பிரச்சினை எழுந்துள்ளது. அதன்பின், நிர்வாகக்குழுவில் தனக்கு சாதகமானவர்கள் மூலம் குறிப்பிட்ட மூத்த பெண் பேராசிரியை மீது பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்துள்ளது.
நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் மோசமடைய கல்லூரி நிர்வாகக் குழுவின் சீர்கேடும் முக்கியக் காரணம். இதனால், சர்ச்சைக்குரிய இக்கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் வாய்ப்பு உள்ளது” என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT