Published : 02 Apr 2024 09:00 PM
Last Updated : 02 Apr 2024 09:00 PM

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.2: ஆம் ஆத்மியின் ஆறுதலும் அச்சமும் முதல் கனடா பள்ளி உணவுத் திட்டம் வரை

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன்: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்த பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

முன்னதாக, வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அமர்வு, “இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிடம் இருந்து ஊழல் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனாலும், அவரை ஆறு மாதங்களாக சிறையில் வைத்துள்ளீர்கள். அவருக்கு தற்போது காவல் தேவையா இல்லையா என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அவர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை விசாரணையில்கூட நீங்கள் அறிந்துகொள்ளலாம்” என்று அமலாக்கத் துறையிடம் கூறியது.

மதுபான கொள்கை வழக்கில் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை ஆம் ஆத்மி சற்றே ஆறுதலாக பார்க்கிறது.

“மேலும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் கைதாக வாய்ப்பு”: அதேவேளையில், “பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது. நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், ராகவ் சதா உள்ளிட்டோர் தேர்தலுக்கு முன் கைது செய்யப்படலாம்” என்று டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மேலும் “அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருப்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதையடுத்தே, தற்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்தகட்ட தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்” என்றும் அதிஷி தெரிவித்தார்.

கச்சத்தீவு சர்ச்சை - ஓயாத வார்த்தைப் போர்: “கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ.-யில் வெளியான தகவலை வைத்து பச்சை பொய்யை பரப்புகின்றனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர்” என்று பாஜகவை திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடியுள்ளார்.

இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, “கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு, கச்சத்தீவு மீட்க வேண்டும் என்பதே. இந்தியாவிடம் இல்லாத நிலப்பரப்பு இல்லை. எனினும், கச்சத்தீவு எதற்காக வேண்டும் என்றால், கச்சத்தீவு இருந்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்” என்று தெரிவித்தார்.

அதேவேளையில், “கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எப்படியோ துரோகம் செய்து விட்டது. ‘தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், கச்சத்தீவை தற்போது எங்களுக்கு கொடுங்கள்’ என பாஜக ஏன் வலியுறுத்தவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்துக்கு திமுகவும் பாஜகவும் துரோகிகள்தான்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கடப்பாவில் சர்மிளா போட்டி: ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஓடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களின் 17 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா தொகுதியில், அம்மாநில முதல்வர் ஜெகனின் தங்கையும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா போட்டியிடுகிறார்.

இந்தப் பட்டியலுடன் காங்கிரஸ் கட்சி இதுவரை 228 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எனினும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது குறித்து மவுனம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக எம்எல்ஏ, எம்பிக்கள் மீது 561 வழக்குகள் - அரசு தகவல்: தமிழகம் முழுவதும் எம்எல்ஏ, எம்.பிக்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகளும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகளும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சென்னைக்கு அளித்த சிறப்பு நிதி ரூ.5000 கோடி என்ன ஆனது?’: “சென்னைக்கு ரூ.5,000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது? ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும். ரூ.5,000 கோடியை முறையாக செலவிட்டிருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு செயல்கள் - தமிழக காங். விமர்சனம்: “மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தார்கள். அதனால், தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூ.6,572 கோடி குவித்த பிரதமர் மோடி, ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

மேலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பாஜக அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு செயல்கள் என்று கூறி ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் விசாரணைக்கு ஆஜரான இயக்குநர் அமீர்: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் அமீர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அமீர் இயக்கும் 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான். அந்த அடிப்படையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினார். முன்னதாக, போதைப்பொருள் வழக்கில் எந்தவித விசாரணைக்கும் தயார் என்று அமீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டம் அறிவிப்பு: கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்துக்காக 5 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும். ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும் என்றும் கனடா அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு பட்டினியாக சென்றுவிடுகிறார்கள் என்ற கவலை பெற்றோருக்கு நீங்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதால் மகிழ்ச்சி கிட்டும். இதனால் அவர்களின் கற்றல் திறன் கூடும் என்று கனடா அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக, “தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: பொய்யான தகவல்கள் அடங்கிய விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் “நீங்கள் செய்தது அப்பட்டமான அத்துமீறல்” என்று யோகா குரு பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை - பென் ஸ்டோக்ஸ் விலகல்: ஐபிஎல் மற்றும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர்களில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து திமுக வழக்கு: வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

“அரசு ஊழியர்களை ஏமாற்றிய ஸ்டாலின்” - இபிஎஸ்: “தமிழக மக்களுக்கு மட்டும் அல்ல, அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டுவிட்டார்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் கூறுகையில், "2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின் அதில் 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். 100 நாள் வேலையை 150 நாள் வேலையாக உயர்த்துவதாக கூறினார். கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக கூறினார். இதையெல்லாம் செய்தாரா ? பட்டை நாமத்தை தான் போட்டார். மக்களுக்கு மட்டுமோ அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி அவர்களுக்கும் பட்டை நாமத்தை போட்டவர் தான் இந்த ஸ்டாலின்" என்று தெரிவித்துள்ளார்.

“அது நள்ளிரவுக் கூட்டணி... இது கள்ளக் கூட்டணி!”: “தமிழகத்தில் பாஜக - பாமக கூட்டணி என்பது நள்ளிரவு கூட்டணி. அதிமுக கூட்டணி என்பது கள்ளக் கூட்டணி” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

“மக்களை மிரட்டும் காங்கிரஸ்” - பிரதமர் மோடி ஆவேசம்: முதல் முறையாக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதைப் பற்றிப் பேசாமல், ‘பாஜக வெற்றி பெற்றால் நாடு தீ பற்றி எரிந்து விடும்’ என்று மக்களை மிரட்டுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x