Last Updated : 02 Apr, 2024 05:44 PM

 

Published : 02 Apr 2024 05:44 PM
Last Updated : 02 Apr 2024 05:44 PM

வடை சுடுவது, டீ ஆற்றுவது... - எம்.பி வேட்பாளர்களின் ’உத்தி’கள் மீதான மக்களின் பார்வை என்ன?

கள்ளக்குறிச்சி: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்ற திருவிழா வந்தாலே, அரசியல்வாதிகளின் ஆரவாரத்துக்கு அளவே இல்லை. வாக்காளர்களை எப்படி எந்தெந்த வகையில் கவரலாம், ஊடகங்களில் தங்களின் வாக்கு சேகரிப்பை தினந்தோறும் இடம்பெறச் செய்வது என்ற யோசனையோடு தான் தேர்தல் வாக்குப் பதிவு நாள் வரை கண் விழிப்பர்.

அந்த வகையில் கட்சி சார்ந்த வேட்பாளருக்கு, கட்சி நிர்வாகிகளையும் தாண்டி, ஊடகப் பிரிவிடம் ஆலோசனையையும் கேட்க மறப்பதில்லை. வாக்காளர்கள் முன் புதுவிதமாக என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை வழங்குவதே ஊடகப் பிரிவுதான். அந்த ஆலோசனைக்கேற்ப பொதுவெளியில் இதுபோன்ற செயல்களை செய்து, ஊடகங்கள் வழியாக வாக்காளர்களை சென்றடையும் உத்தி என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அந்தச் செயல்கள் யாவும் வாக்காளர்களிடம், வேட்பாளரின் மீதான் மதிப்பை உயர்த்த வேண்டுமே தவிர, அவசியமற்ற செயல்களால் வாக்காளரின் அதிருப்தியை ஏற்படுத்தும். குறுகிய கால இடைவெளியில் வாக்குப் பதிவு உள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் வேட்பாளரின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்கிறார் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வட்டாரத் தலைவர் அசோகன்.

ரிஷிவந்தியம் அருகே தெருவோர மீன் கடையில் மீன் சுத்தம் செய்யும் திமுக வேட்பாளர் மலையலரசன்

உதாரணத்துக்கு, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர், வாக்கு சேகரிக்கச் செல்லும்போது, தெருவோர மீன் கடையில் மீன் கழுவுவது போன்ற புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதேபோன்று தலைவாசலில் உழவர் சந்தைக்குச் சென்று காய்கறிக் கடையில் நின்றுகொண்டு விற்பனை செய்வது போன்று புகைப்படும் எடுத்துக் கொண்டார்.

இவர்தான் இப்படி என்றால், திண்டுக்கல்லில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா, தெருவோர கடையில் டீ கடையில், எண்ணெய்ச் சட்டி அருகே அமர்ந்து வடை சுடுவது, வயல்வெளிப் பகுதிக்குச் சென்று பூச்சி மருந்து தெளிப்பது போன்ற செயல்களால் புகைப்படும் எடுத்துக் கொண்டார். இப்படியாக பலவித நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டு இருந்தாலும், அவை வாக்காளர்கள் மத்தியில் எந்த அளவுக்கு சென்றடைகிறது என்றால், அவை நகைப்புக்குரிய ஒரு செயலாகவே இருப்பதாக பெரும்பாலும் உணர்கின்றனர்.

திண்டுக்கல்லில் தெருவோர டீ கடையில் வடை சுடும் பாமக வேட்பாளர் திலகபாமா

சொற்பொழிவாளர் நெல்லைக் கண்ணன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, அவர் தேர்தலில் போட்டியிட்டபோது சந்தித்த அனுபவங்களை பகிர்ந்திருப்பார். அதில் வேட்பாளருக்கு ஒரு முழு முட்டாள்தான் வழிநடத்தியதாகவும், யாரைப் பார்த்தாலும் கும்பிடணும்னு உத்தரவு போடுவார் என்று நகைச்சுவை ததும்ப பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைத்தான் அன்றே நெல்லைக் கண்ணன் குறிப்பிட்டாரே என வாக்காளர்கள் உதாரணப்படுத்துவதை, தற்போதைய வேட்பாளர்கள் அறிந்திருப்பார்களா என்கின்றனர் மக்கள்.

ஒவ்வொரு கட்சிக்கென கொள்கை இருக்கும், அதை முன்வைத்தோ அல்லது தொகுதியில் நிலவும் குறைபாடுகள், வாக்காளர்களிடம் தான் சார்ந்த கட்சிப் பணிகள், தொகுதிக்கான தேவைகள் குறித்து வாக்கு சேகரிப்புக்கு முக்கியத்துவம் தராமல், டீ கடைக்குச் சென்று டீ ஆற்றி கொடுப்பது, தெருவோர கடைகளில் வடை சுடுவது, தெருவோர மீன் கடைகளில் மீன் சுத்தம் செய்து, காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்பது போன்ற செயல்கள் வாக்கு சேகரிக்க உதவாது என்பதை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறியாமல் இருப்பது விந்தைதான் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

சில கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, வாக்காளர்களிடம் பேதம் பார்க்காமல், அவர்களுடன் நெருக்கம் இருப்பதை வெளிப்படுத்தும் விதம்தான் இதுபோன்ற செயல்கள் என நியாயப்படுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x