Published : 02 Apr 2024 04:00 PM
Last Updated : 02 Apr 2024 04:00 PM
சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 24 லட்சம் குடும்பங்களுக்கு 1,487 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கபட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரணத் தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்யநாரயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 1,455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டு விட்டது.
நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சம் 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்களை பரீசிலனை செய்து சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை என, மொத்தம் 1,487 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ம் தேதி தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT