Published : 02 Apr 2024 02:51 PM
Last Updated : 02 Apr 2024 02:51 PM
சென்னை: பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் 54.40 லட்சம் ரூபாய் அளவுக்கு நடந்த முறைகேடுகள் தொடர்பான புகார் மீதான விசாரணை நிலை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இந்திரா வீட்டு வசதித் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், சென்னையை அடுத்த சோழவரம் பகுதியில் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கியதில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது.
வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை வீடு கட்டாதவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், மனுதாரர் புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நலத்திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா? புகார் அளித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுமா?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த முறைகேடு தொடர்பான புகார் மீதான விசாரணை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT