Published : 02 Apr 2024 02:01 PM
Last Updated : 02 Apr 2024 02:01 PM
ஶ்ரீவில்லிபுத்தூர்: மகளிருக்கு காலையில் அரசு வழங்கும் பணம், இரவு டாஸ்மாக் மூலம் கஜானாவுக்கு திரும்புவது தான் திராவிட மாடல் ஆட்சி, என ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: தென்காசி தொகுதிக்கு அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வேட்பாளர் தேவை என்பது மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜான்பாண்டியனை வேட்பாளராக தாமரை சின்னத்தில் நிறுத்தியுள்ளார்.
செண்பகவல்லி அணை, அழகரணை திட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கம், கனிம வள கடத்தலை தடுத்தல், விளை பொருட்களை சேமிக்க குளிர்பதன சேமிப்பு கிடங்கு, வத்திராயிருப்பு - வருஷநாடு மலை பாதை, அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்ட தென்காசி தொகுதியின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை வெற்றி பெற்றவர்கள் முறையாக செயல்பட்டு இருந்தால், இதில் 60 சதவீதம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும்.
தமிழக அரசு மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது திமுக. மகளிருக்கு ரூ.ஆயிரம் உரிமை தொகை என கூறிவிட்டு அவர்களது கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்குகின்றனர். மகளிருக்கு காலையில் அரசு வழங்கும் பணம் இரவு டாஸ்மாக் மூலம் கஜானாவுக்கு திரும்பி சென்று விடுவது தான் திராவிட மாடல் ஆட்சி.
37 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, முத்ரா கடன் தள்ளுபடி, ஜன்தன் சேமிப்பு கணக்கு என பல்வேறு திட்டங்களை பாஜக அரசு வழங்கி உள்ளது. மாநில அரசு பால் விலை, மின்கட்டணம் , வீட்டு வரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய நிலையில், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் காப்புத் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது மக்களுக்கு வேதனையை அளித்துள்ளது.
மத்திய அரசு சாதனை படைத்திருக்கிறது என்றால், திமுக அரசு மக்களுக்கு வேதனைகளை வழங்குவதில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரு நாட்களாக கட்சத்தீவு குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. கட்சத்தீவு மீட்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மோடி தலைமையான பாஜக அரசு மேற்கொண்டு, வரும் காலங்களில் அதில் வெற்றி பெறும் என்பதை உறுதியாக கூறுகிறேன். இதன்மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் உரிமை பாதுகாக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வல்லரசாக மாற்றுவார். மோடிக்கு துணை நிற்பதற்காக தமிழகத்தில் இருந்து ஜான்பாண்டியன் உள்ளிட்டோரை நீங்கள் வெற்றி பெற்று மக்களவைக்கு அனுப்ப வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரோடு நேரடி தொடர்பில் இருக்கக்கூடியவர் ஜான்பாண்டியன். அவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லதை செய்வார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT