Published : 02 Apr 2024 01:51 PM
Last Updated : 02 Apr 2024 01:51 PM
கோவை: கோவை-துபாய் இடையே விமான சேவை தொடங்கவும், கோவையிலிருந்து பெங்களூருவிற்கு இரவு நேர ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற 10 ஆண்டு கால கோரிக்கை குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தொழில் நகரான கோவையில் இருந்து தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படுகிறது. துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு புதிதாக விமான சேவை தொடங்க வேண்டும் என தொழில்துறையினர் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் ரயில் பயணிகள் நலசங்கத்தினர் சார்பில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர ரயில் வசதி வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவ்விரண்டு கோரிக்கைகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இச்சூழலில் கோவையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நிருபர் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறியதாவது: கோவை - பெங்களூரு இடையே தற்போது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக அவர்கள் பயன் பெறும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கோவை பிரதான ரயில்வே நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் கோவையில் இருந்து பயணத்தை தொடங்கும் வகையில் புதிய ரயில் சேவை தொடங்க வாய்ப்பில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு சார்பில் வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போல் பீளமேடு, சிங்காநல்லூர் ரயில் நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
கோவை- துபாய் விமான சேவை தொடங்காததற்கும் காங்கிரஸ் அரசு தான் முக்கிய காரணம். இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிதாக வழித்தடங்கள் இல்லை. புதிதாக அந்நாடுகளுக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்றால், ஏற்கெனவே உள்ள ஏதேனும் உரிமத்தை தான் பெற வேண்டும். புதிதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு ‘வைட் பாடி’(பெரிய) விமானங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து ‘வைட் பாடி’ விமானம் செல்ல வேண்டும். மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் கோவையில் சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிக்க தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
கோவையின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் விமான நிலையத்தின் வளர்ச்சி குறைவாக உள்ளது. பயணிகள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இடநெருக்கடி அதிகம் காணப்படுகிறது. விரிவாக்க திட்டம் தான் இதற்கு தீர்வாகும். இறுதிகட்ட 87 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து தர தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...