Published : 02 Apr 2024 12:06 PM
Last Updated : 02 Apr 2024 12:06 PM
சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எப்படியோ துரோகம் செய்து விட்டது, தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், கச்சத்தீவை தற்போது எங்களுக்கு கொடுங்கள் என பாஜக ஏன் வலியுறுத்தவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்துக்கு திமுகவும் பாஜகவும் துரோகிகள்தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “மக்கள் திமுக ஆட்சியை வெறுத்து இருக்கின்றனர். திமுகவினர் செல்லும் இடமெல்லாம் விரட்டியடிக்கப்படுகின்றனர். திமுகவின் எதிர்ப்பு, தற்போது எங்களுக்கு ஆதரவு அலையாக மாறி உள்ளது. காவிரி நதிநீர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை 28 நாட்களில் ஸ்தம்பிக்க வைத்தோம். மத்திய அரசின் மீது வழக்கு பதிவிட்டோம்.
மத்திய அரசு காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு துரோகம் செய்கிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தோம். அதோடு எங்களுடைய உரிமையை நிலைநாட்டினோம்.
‘திமுகதான் முழு காரணம்..’ கச்சத்தீவு விகவாரத்தில் திமுக துரோகம் செய்தது. கருணாநிதிக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.கச்சத்தீவு போனதுக்கு திமுகதான் முழு காரணம். திமுகவால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என நினைத்து மத்திய அமைச்சர் மூலம், பாஜக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் அது எடுக்கப்படவில்லை. இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வந்தபோது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது ஆனால் இது குறித்து எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை ஏன்?.
’இரு துரோகிகள்’ கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எப்படியோ துரோகம் செய்து விட்டது, தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், கச்சத்தீவை தற்போது எங்களுக்கு கொடுங்கள் என பாஜக ஏன் வலியுறுத்தவில்லை? கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்துக்கு திமுகவும் பாஜகவும் துரோகிகள்தான். திமுகவால் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வரும் போது தான் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தமிழகம் மீது பாசம் வரும்.
அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது. கிட்டதட்ட 20 ஆயிரம் புத்தகங்கள் படித்திருக்கிறேன் எனக் கூறுகிறார். என்ன 20,000 புத்தகம் படிச்சாரோ! அரசியலில் எல்கேஜி மாணவராக இருக்கிறார். ஆர்டிஐ மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறார்.
நன்றி மறக்கக் கூடாது.. எங்களுடைய முதுகின்மேல் ஏறி சவாரி செய்தவர்கள் தான் அதிகம். நாங்கள் யாருடைய முதுகின்மீது ஏறியும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. பாமக கட்சி ஆரம்பிக்கும் போது ராமதாஸ் கூறிய ஒரு விஷயம் என்னவென்றால், நானும் என்னுடைய குடும்பமும் அரசியலில் ஈடுபட மாட்டோம், எந்த அரசு பதவிக்கும் வரமாட்டோம், அப்படி வந்தால் சவுக்கு எடுத்து அடியுங்கள் என்று கூறினார். தற்போது கட்சிக்காரர்கள் தான் அவரை சவுக்கு எடுத்து அடிக்க வேண்டும், இப்பொழுது மக்களவைத் தேர்தலில் யார் நிற்கிறார் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி.
அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் அறிமுகப் படுத்தியதே ஜெயலலிதாதான். கொள்கையாவது.. கூட்டணியாவது.. வெங்காயமாவது என்றுதான் ராமதாஸ் செயல்படுகிறார். சீட் பேரம், 'மற்றவை' பேரம்தான் அவருக்கு முக்கியம். பாமகவில் 5 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். தனித்து நின்று ஒரு தொகுதியிலாவது வென்றிருக்க முடியுமா? நன்றி மறக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT