Last Updated : 02 Apr, 2024 10:58 AM

 

Published : 02 Apr 2024 10:58 AM
Last Updated : 02 Apr 2024 10:58 AM

ஸ்டாலின் பாணியில் இபிஎஸ் மார்க்கெட் பிரச்சாரம்: திருப்பத்தூர் அதிமுகவினர் உற்சாகம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாணியில் காய்கறி மார்க்கெட், தேநீர் கடைகளுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் அதிமுகவினர் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றும், இன்றும் (செவ்வாய்கிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அரக்கோணம், வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (திங்கள்கிழமை) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில் தங்கினார். இதையடுத்து, இன்று மாலை 4 மணியளவில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்த எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை நேரங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை, உழவர் சந்தை போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் நலம் விசாரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதை போல எடப்பாடி பழனிசாமியும் மார்க்கெட் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அதிமுகவினர் யோசனை தெரிவித்தனர்.

இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி உடனடியாக நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கு காய்கறி, கீரை உள்ளிட்ட உணவு வகைகளை வாங்க வந்த மக்களிடம் அவர் நலம் விசாரித்தார்.

முதன்முறையாக காய்கறி மார்க்கெட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்த்ததும் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

பிறகு, ஒவ்வொரு கடையாக சென்று தி.மலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாளுக்கு அவர் வாக்கு சேகரித்தார். தக்காளி கடைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி ஒரு கிலோ தக்காளி என்ன விலை? என வினவினார். அதற்கு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்கிறோம் என வியாபாரி கூறியதை கேட்ட எடப்பாடி பழனிசாமி வியாபாரிகளிடம் என்ன விலைக்கு தக்காளி கொள்முதல் செய்கிறீர்கள்? என கேட்டார்.

பிறகு, அங்கிருந்த நகர்ந்து கீரை விற்பனை செய்யும் இடத்துக்கு சென்று கீரை கட்டு என்ன விலை எனக் கேட்டார். இவ்வாறு, வெங்காயம், காய்கறி, கறிவேற்பிலை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று ஒவ்வொரு காய்கறியாக என்ன விலை விற்பனை செய்கிறீர்கள், எங்கிருந்து காய்கறி வருகிறது.

வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள் மார்க்கெட்டில் உள்ளதா?, பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் ஒரே இடத்தில் கிடைக்கிறதா? என ஒவ்வொன்றாக கேட்டபடி, 'அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அவர் வெற்றிபெற்றால் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பார்' எனக்கூறி துண்டு பிரசுரங்களை வியாபாரிகளிடம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

பிறகு, அங்கிருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி அங்கிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதைதொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புப் பகுதியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x