Published : 02 Apr 2024 11:00 AM
Last Updated : 02 Apr 2024 11:00 AM
2024 மக்களவைத் தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட நிலையில், அது பாஜகவுடன் இணைந்து 10 தொகுதிகளில் களம் காண்கிறது. வடக்கு, மேற்கு தமிழகத்தில் கணிசமான வாக்குவங்கி வைத்துள்ள பாமக 2019 தேர்தலை அதிமுக கூட்டணியில் எதிர்கொண்டது. இப்போது புதிய கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ளும் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக கூட்டணியைப் புறக்கணித்தது ஏன், சாதிவாரி கணக்கெடுப்பு, மாநில அரசியல் எனப் பல விஷயங்கள் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு விரிவான பேட்டியளித்துள்ளார். அதன் விவரம்:
2024 மக்களவைத் தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை. என்டிஏ கூட்டணியில் இணைந்தது ஏன்? - 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் எனது இலக்கு. இப்போது 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் 2036-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். கட்சி அத்தொகுதியில் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் நான் போட்டியிடவில்லை.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு என் கவனம் முழுவதும் தமிழகத்தின் மீதே இருக்கும். இதுவரை நாங்கள் திமுக, அதிமுக கூட்டணியின் அங்கமாகவே பிரச்சாரம் செய்திருக்கிறோம். இப்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் பொறுப்பு எங்கள் கட்சியின் மீது இருக்கின்றது. மாற்றம் வேண்டும் என்பதாலேயே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
கடந்த 57 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் இங்கு மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளன. தமிழகத்தில் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த இருகட்சிகளுமே அவை தோற்றுவிக்கப்பட்ட நோக்கம், கொள்கைகள் மீதான பார்வையைத் தொலைத்துவிட்டன.
திமுகவை நல்நிர்வாகம் வழங்கும் பொருட்டு அண்ணா தொடங்கினார். ஆனால் நிர்வாகம் என்ற போர்வையில் இப்போது திமுகவினர் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர். முதல்வரை சுற்றியுள்ள அமைச்சர்கள் எல்லாம் தொழிலதிபர்கள். முதல்வருக்கு தன்னைச் சுற்றி நடப்பவை என்னவென்றே தெரியவில்லை. இரண்டு மூன்று அமைச்சர்கள் மட்டுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.
உதாரணம் சொல்ல முடியுமா? - சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்விவகாரங்களில் முதல்வரைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் அவரை தவறாக வழிநடத்தி இதைச் செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆனால், 2008 இந்திய புள்ளியியல் சட்டத்தின் படி ஒரு பஞ்சாயத்து நிர்வாகத்தால் கூட இந்த கணக்கெடுப்பை செய்ய முடியும். பிஹார் அரசு இந்தச் சட்டத்தின் கீழேயே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியதாக பாட்னா நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பிஹார் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் மூலம் மாநிலத்தில் 1,86,000 குடும்பங்கள் மாதம் ரூ.6000 குறைவான வருமானத்துடன் வாழ்வதைத் தெரிந்து கொண்ட அரசு அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. ஒவ்வொரு குடும்பமும் அந்த நிதியைக் கொண்டு தொழில் தொடங்கலாம் அல்லது கல்விக்கு அதைப் பயன்படுத்தலாம். இதன் காரணமாகவே நமக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என நானும் வலியுறுத்துகிறேன்.
முதல்வரைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் சாதிப் பிரச்சினைகள் வரும், வன்னியர்கள் கூடுதல் இட ஒதுக்கீடு கேட்பார்கள், தேர்தலில் கூடுதல் சீட் கேட்பார்கள் என்று கூறுகிறார்கள். அமைச்சரவையில் வன்னியர்கள் நிறைய பேர் இடம்பெற்றால் தென் மாவட்ட மக்கள் வாக்குகளைப் பெற முடியாது என்றெல்லாம் கூறி வருகின்றனர்.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதாக அதிமுக அறிவித்ததே 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதன் தோல்விக்குக் காரணமா? - இது அபத்தம். அதிமுக தோல்விக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மட்டுமே காரணம். அவர்கள் ஒருவொருக்கொருவர் தோற்கடிக்க நினைத்தனர். 2019 தேர்தல் முடிவு உண்மையில் அதிமுகவின் தோல்வி என்றுகூட நான் கூற மாட்டேன். 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் 66 சீட் பெற்றனர். அதில் 36 சீட்கள் அவர்களுக்கு எங்களால் கிடைத்தது.
அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எங்கே தவறு நடந்தது? - நாங்கள் அவர்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. தைலாபுரத்துக்கு அதிமுக மூத்த தலைவர் சிவி சண்முகம் தாமாகவே வந்தார். அதேபோல்தான் சேலம் மேற்கு எம்எல்ஏ அருளும் தன் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
கடைசியாக நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் எம்பி சீட் வென்றது 1998-ல் நடந்தது. 2009ல் வெற்றி பெறவில்லை. 2019-லும் வெற்றி பெறவில்லை. நாங்கள் அவர்களின் வாக்குகளைப் பெறவில்லை. அவர்களுக்குத் தான் எங்களின் வாக்கு வங்கி கைமாறியது. எல்லாம் போதும் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.
எங்கள் கட்சியில் சிலர் அதிமுக, பாமக வாக்கு வங்கி இணையும்போது வெற்றி கிட்டும் என நம்பினர். குறிப்பாக உள்ளாட்சிகளில் வெற்றி கிடைக்கும் என நம்பினர். ஆனால், 1998க்குப் பின்னர் நாங்கள் தான் ஒவ்வொரு முறையும் அதிமுகவுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
1996-ல் ஜெயலலிதா சிறை சென்றபோது அவருடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக பேசப்பட்டது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் நாங்கள் அவர்களுடன் கூட்டணி அமைத்தோம். அதன் பின்னர் வைகோ வந்தார். வாழப்பாடி வந்தார். 40-ல் 30 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என யாருமே நம்பவில்லை.
2009ல் ஜெயலலிதா எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். நாங்கள் அவருடன் இணைந்தோம். அவர் 12 சீட்கள் வென்றார். நாங்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2019ல் எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆதரவில்லாமல் முதல்வராக தொடர்ந்திருக்க முடியாது. இடைத்தேர்தலில் எங்கள் ஆதரவால் தான் 9 இடங்களில் அவர் வெற்றி பெற்றார். அதுவும் குறிப்பாக 5 இடங்களில் வெற்றி எங்களாலேயே சாத்தியமானது.
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமே நாங்கள் அதிமுகவில் இணைந்தோம். ஆனால் கடைசி நிமிடம் வரை அவர்கள் அதனைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தனர். கடைசி நிமிடத்தில் அதனை நிறைவேற்றினர். எங்கள் கட்சியின் அப்போதைய தலைவர் ஜிகே மணி மூலம் எங்களுக்கு சீட் வேண்டாம் இட ஒதுக்கீட்டு முடிவில் கையெழுத்திடுங்கள் என வலியுறுத்துங்கள் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார். இன்று என்னவோ நாங்கள் அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாக அதிமுகவினர் பேசுகின்றனர்.
நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பியதே இல்லையா? - 2024-ஐ பொருத்தவரை நான் அதிமுக கூட்டணி வேண்டாம் என நினைத்தேன். கடந்த 10 மாதங்களாக அதிமுக விசிகவிடம் இரைந்து கொண்டிருந்தது. பின்னர் காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் நாம் தமிழர் கட்சியிடம் பேசினார்கள். கடைசியாக கூட்டணிக்கு யாருமே வராததால் எங்கள் பொதுக் குழு கூட்டத்தின் ஆழம் பார்த்தனர். அதுவரை அவர்கள் எங்களைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை. நான் எப்போதுமே அவர்களுடனான கூட்டணி பற்றி யோசிக்கவே இல்லை.
சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்காத, நீட் தேர்வை தூக்கிப்பிடிக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள். ஆனால் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறாரே? - சுதந்திரத்துக்குப் பிந்தைய 77 ஆண்டுகளில் காங்கிரஸ் நாட்டை 60 வருடங்கள் ஆட்சி செய்துள்ளது. ஏன் அவர்கள் ஒருமுறை கூட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம், 2011-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 50 எம்பிக்கள் ஆதரவோடு அழுத்தம் கொடுத்தேன். அழுத்தத்தின் காரணமாக சமூகநீதி அமைச்சகம் சார்பில் சமூக பொருளாதார சென்சஸ் எடுக்கப்படும் என்றார். ஆனால் அது நேர்த்தியாக செய்யப்படவில்லை.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலுக்காக காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசியது. ஆனால் இப்போது அது பற்றி பேசவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பில் பாஜகவின் நிலைப்பாட்டை நான் நியாயப்படுத்தவில்லை. பாஜகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேபடாது எனக் கூறவில்லை. எங்கள் தலைவர் ராமதாஸ் இதற்கான உரிய அழுத்தத்தை பாஜகவுக்கு கொடுப்பார்கள்.
பாஜகவைவிட ஏன் பாமக குறைந்த இடங்களில் போட்டியிடுகிறது? சில இடங்களில் பாஜக, கூட்டணிக் கட்சிகளுக்கு பலமில்லை. ஆனால் அங்கு பாமகவுக்கு ஆதரவு இருக்கிறது. இந்த ஆதரவை எப்படி கூட்டணிக் கட்சிகளுக்கான வாக்குகளாக மாற்றப் போகிறீர்கள்?
பாஜக கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது.. எங்களுக்கு அவர்களுடன் புரிதல் எட்டியுள்ளது. பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் பார்க்க வேண்டும். இந்தத் தேர்தல் நிறைய ஆச்சர்யங்களைத் தரப் போகிறது. அதிமுக 4 ஆக உடைந்துவிட்டது. கூட்டணி பலமும் இல்லாமல் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப சட்டப்பேரவை தேர்தலின் மீதே தனது கவனம் இருப்பதாகக் கூறுகிறார். அந்தக் கட்சியில் மக்களவைத் தேர்தல் பற்றி எவ்வித அக்கறையும் தெரியவில்லை. அவர்களின் வேட்பாளர்கள் கூட பலம் பொருந்தியவர்களாக இல்லை.
இப்போது அமைந்துள்ள கூட்டணி 2026 வரை தொடருமா? உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்பார்களா? -இப்படியான பேச்சுக்கள் எதையும் நாங்கள் இதுவரை பேசவில்லை. முதலில், 2024 தேர்தலில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. 2026-ல் தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி அமையும். அது கூட்டணி ஆட்சியாக அமையும். எல்லா திராவிடக் கட்சிகளுக்கு நான் மறுப்பு சொல்லவில்லை. தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகள் இருக்கின்றனர். முதலில் திமுக, அதிமுகவை விட்டொழிப்போம். 2026 தேர்தலில் திமுக தானாகவே தோற்றுவிடும். அதிமுகவுக்கு ஒருவேளை எங்களால் பலம் கிடைத்தால் அவர்கள் 2026ல் மீண்டும் ஆட்சிக்கு வர முயல்வார்கள்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் காண்கிறீர்களா? - 2019 தேர்தலின்போது தமிழகத்தில் பாஜகவுக்கு வலுவான எதிர்ப்பு இருந்தது. அப்போது மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தன. மக்கள் மத்தியில் இரண்டு எதிர்ப்பலைகள் உருவானது. அதனால் மாநிலத்தில் திமுக ஆட்சி சாத்தியமானது. 2021-ல் பாஜக எதிர்ப்பு அலை குறைந்தது. இப்போது அது வெகுவாகவே குறைந்துள்ளது. தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
என்டிஏ ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி கிட்டுமா? - எனக்கு அமைச்சரவைப் பதவி வேண்டாம். எனக்கு தமிழக அரசியலில் முழுவீச்சில் ஈடுபடவே விருப்பம். அதனாலேயே நான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்தேன். 2026 தேர்தல் களம் திமுகவை விடுத்து திறந்த களம். அதிமுக பலமாக இல்லை. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். கூட்டணி நன்றாக அமைந்தால் மக்கள் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் அதிமுக என்னவாகிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.
நேர்காணல்: உத்தவ் நாயக் | தொகுப்பு: பாரதி ஆனந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT