Published : 02 Apr 2024 05:28 AM
Last Updated : 02 Apr 2024 05:28 AM
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக்ஷா சுப்பிரமணியன், தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளில், கைதி சீருடையில் அல்லாமல், வழக்கமான பேன்ட் - சட்டை அணிந்து காணொலி மூலம் வாதிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை அடையாறு காந்திநகரில் விஸ்வபிரியா என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி, முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சுபிக்ஷா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, 587 முதலீட்டாளர்களிடம் ரூ.47.68 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக விஸ்வபிரியா ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் செக்யூரிட்டீஸ், அதன் துணை நிறுவனங்களான அக்ஷய பூமி இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட 17 நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்களாக இருந்த சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், ஸ்ரீவித்யா, அகஸ்டின், கணேஷ் உள்ளிட்ட 17பேர் மீது சென்னை பொருளாதாரகுற்றப்பிரிவு போலீஸார் 2013-ல் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல, வங்கிக்கடன் மோசடி, பொதுமக்களிடம் பணம் வசூல் தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015-ல் இவர் மீது மற்றொருவழக்கு பதிவு செய்தனர். வங்கிகளில்கடன் பெற்று ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்து, அவரது சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையினர், அவரை கடந்த 2018 பிப்ரவரி 27-ம் தேதி கைது செய்தனர்.
சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், அவர் மீதான வழக்கை விசாரித்து, கடந்த 2023 நவம்பரில், சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், மற்ற இயக்குநர்களுக்கு 4-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், சில இயக்குநர்களை விடுவித்தும் தீர்ப்பளித்தது. சுபிக்ஷா சுப்பிரமணியன் தண்டனை குற்றவாளியாக புழல் சிறையில் உள்ளார்.
இதற்கிடையே, அவரது கோரிக்கையின்பேரில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகளில், வழக்கறிஞரான அவரே ஆஜராகி வாதிட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.அதன்படி, சுபிக்ஷா சுப்பிரமணியனின் விஸ்வபிரியா நிறுவன கலைப்பு விவகாரம் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நாளை (ஏப்.3) விசாரணைக்கு வர உள்ளன.
இந்நிலையில், சுப்பிரமணியன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘காணொலியில் ஆஜரானால், என் தரப்பு நியாயத்தை திறம்பட எடுத்துரைக்க முடியாது என்பதால், நேரில் ஆஜராகி வாதிட அனுமதி அளிக்க வேண்டும். தவிர, காணொலி விசாரணையின்போது நான் கைதிகளுக்கான சீருடையில்தான் ஆஜராக வேண்டும். சிவில் உடை (வழக்கமான பேன்ட்-சட்டை) அணிய கூடாது என்று புழல் சிறைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஒருவேளை, நான் காணொலியில் ஆஜராக நேரிட்டால், அப்போது சிவில் உடை அணிந்து வாதிட அனுமதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வு, உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிவாதிட அனுமதிக்க வேண்டும் என்றஅவரது கோரிக்கையை நிராகரித்தனர். அதேநேரம், கைதிகளுக்கான சீருடையில் அல்லாமல் சிவில் உடை(வழக்கமான பேன்ட்-சட்டை) அணிந்து காணொலி விசாரணையில் ஆஜராகி வாதிடலாம் என்று அவருக்கு அனுமதி அளித்துள்ளனர்.
கைதிகள் சீருடை: தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட 138 சிறைச்சாலைகள் உள்ளன. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் உள்ளனர். விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக பிரித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை கைதிகளில் ஆண்களுக்கு வெள்ளை நிற மேல் சட்டை, அரைக்கால் சட்டையும், பெண்களுக்கு வெள்ளை நிற சேலையும் சிறை சீருடையாக வழங்கப்படுகிறது. விசாரணை கைதிகள் தங்கள் சொந்த உடைகளை அணிந்துகொள்ளலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment