Published : 15 Apr 2018 08:37 AM
Last Updated : 15 Apr 2018 08:37 AM

இன்று (ஏப்ரல் - 15) திருநங்கையர் தினம்: வாங்கப்பட்ட பாதை அல்ல; வழங்கப்பட்ட பாதை

கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

திருநங்கைகளை மேம்படுத்தும் வகையில் இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை, திருநங்கையர் நாள் எனக் கொண்டாட கடந்த 2011 மார்ச் 11-ல் அரசாணை பிறப்பிக்கப்பட் டது.

திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைத்து அவர்களுக்கான நாள் கொண்டாடப்பட்டாலும், சமூகத்தில் இன்னும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

திருநங்கை என்றாலே, பாலியல் தொழில் செய்பவர்கள்தான் என்ற தவறான புரிதல் உள்ளது. அவர்களைப் பற்றிய புரிதலை இந்த திருநங்கைகள் நாளில் பார்ப்பது அவசியம்.

நான்கு காரணிகள்

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மனநலத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஆ.காட்சன் கூறியதாவது:

ஒரு மனிதனின் பாலியல் அடையாளத்தைப் புரிந்துகொள்ள 4 காரணிகள் அவசியம். ஒன்று, அவரது வெளிப்படையான பாலுறுப்புகள், 2-வது உடலின் உள்ளே உள்ள இனப்பெருக்க உறுப்புகள், 3-வது, தான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற மூளையின் புரிந்துகொள்ளுதல், 4-வது, யார் மீது பாலியல் ஈர்ப்பு ஏற்படுகிறது என்பவையே.

முதல் மூன்றும் ஒரே பாலினத்தையும், நான்காவது எதிர்பாலினரையும் சுட்டிக் காண்பிக்கும்போது எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. அதாவது வெளியில் தெரியும் ஆணுறுப்பு, விரைப்பைக்குள் இருக்கும் விரைகள், தான் ஆணாகத்தான் பிறந்திருக்கிறோம், ஆணாகத்தான் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற மனநிலை, பெண் மீதான பாலியல் ஈர்ப்பு, இவை எல்லாம் ஒத்திருக்கும் ஒரு நபர் தன்னை ஓர் ஆணாகத்தான் அடையாளப்படுத்துவார். இதைப் போலவேதான் பெண் இனத்துக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் முரண்பாடு ஏற்பட்டால்கூட ஒரு நபரின் பாலின அடையாளம் வெளிப்படும் விதமே மாறிவிட வாய்ப்புண்டு.

பாலின அடையாளப் பிறழ்நிலை (Gender identity disorder)

வெளி மற்றும் உள் பாலின, இனப்பெருக்க உறுப்புகள் சரியாக அமைந்திருந்தாலும் சிலருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர்களின் பாலியல் அடையாளத்தில் மனதிருப்தி இருக்காது. உடல் அளவில் ஒரு பாலினத்தை சார்ந்திருந்தாலும் மனதளவில் எதிர்பாலினமாகவே வாழ்வார்கள். 3 வயது முதலே எதிர்பாலினரின் ஆடைகளை அணிவது, ஒத்த பாலினருடன் இருப்பதைவிட எதிர்பாலினருடனேயே இருப்பது, எதிர்பாலினத்தின் விளையாட்டு, உடல் மொழிகள், பாவனைகள், உடைகள் உட்பட அத்தனை பழக்க வழக்கங்களையும் கைக்கொள்வது போன்ற மாற்றங்கள் காணப்படும்.

இவர்கள் வேண்டுமென்றே இப்படி செய்வதில்லை. உடல் இன்பத்துக்காக மட்டும் இப்படி நினைப்பதில்லை. பதின் பருவத்தில் முற்றிய நிலையில் சிலர் தங்கள் பாலுறுப்புகளை நீக்குதல் அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு துணிவார்கள். அவர்களைப் பொறுத்தவரை இயற்கையான காதல், காம உணர்வுகள் தன்பாலினத்தவர் மீதுதான் ஏற்படும் என்றாலும், அவர்கள் தன்பாலின உறவாளர்கள் அல்ல.

இருபாலினக் கலவை

ஒரு பெண்ணுக்கு, உள்ளே கருப்பை மற்றும் சினைமுட்டை உருவாகும் ஓவரி என்ற உறுப்பும், ஆனால் வெளி இனப்பெருக்க உறுப்பு ஆணுறுப்பின் தோற்றத்திலும் இருக்கலாம். ஒரு ஆணுக்கு உள்ளே விரைகளும் வெளியே பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் தோற்றமும் இருக்கலாம். இதைத்தான் இருபாலினக்கலவை (Intersex) அல்லது சூடோஹெர்மஃபராடைட் (pseudohermaphrodites) என்று அழைக்கிறோம். இது பிறக்கும்போதே இருப்பதால் ஒரு பிறவிக் குறைபாடு என்றே சொல்லலாம்.

இவர்களை தன்பாலின உறவாளர்கள் என்ற வரைமுறைக்கு உட்படுத்த முடியாது. இந்த பாதிப்புடையவர்கள் சிலர் திருநங்கைகளாக அடையாளம் காணப்பட வாய்ப்பு உண்டு.

திருநங்கைகளும் சகமனிதர்களே

மேற்குறிப்பிட்ட மூன்றுவகை பாலின பாதிப்புகளை வேறுபடுத்தி அறிந்தால்தான் திருநங்கை என்பது பாலியல் இன்பத்துக்காக மட்டும் அவர்களாக தெரிவுசெய்துகொண்ட பாதை அல்ல என்பதும், அவர்களும் நம்மைப் போலவே சக மனிதர்களாக பாவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் தெளிவாகும். சுருக்கமாக கூறுவதென்றால் இந்தப் பாதை இவர்கள் தேர்ந்தெடுத்த பாதை அல்ல. இவர்களுக்கு வழங்கப்பட்ட பாதை. ஆகையால் நாம் அவர்களை சக மனிதர்களாக பாவிக்கப் பழக வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ஆ.காட்சன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x