Published : 09 Apr 2018 08:02 AM
Last Updated : 09 Apr 2018 08:02 AM
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடி எனும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட சிறிய ஊரில், சங்க காலத்தைச் சோ்ந்த பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு தொடா்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தேவியாற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது மாங்குடி. ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்தில் இருந்து 5 கி.மீ. உள்ளே பயணம் செய்தால் மாங்குடியை அடையலாம். சங்க காலத்தில் இங்கு பயன்படுத்திய பானை ஓடுகள் ஏராளமாக காணப்படுகின்றன. மாங்குடி கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் ஏராளமான கருப்பு, சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன.
வரலாற்றுக்கு முற்பட்ட மாங்குடி
இதுகுறித்து, கள ஆய்வு செய்து வரும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான போ.கந்தசாமி கூறியதாவது:
மாங்குடியில் ரோமானிய மட்பாண்ட வகை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதோடு துருப்பிடித்த நிலையில் சிறு கத்தி போன்ற இரும்புப் பொருள் மற்றும் சுடுமண் துளையிடப்பட்ட கெண்டி மூக்கு மட்கலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சோ்ந்த முக்கிய பகுதியாகவும் மாங்குடி இருந்திருக்கிறது. தேவியாற்றின் தெற்கு பகுதியிலும் ஏராளமான பானை ஓடுகள் கிடைத்து வருகின்றன. மண் மூடிய நிலையில் உறை கிணறுகளும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை வைத்து பார்த்தால் தமிழகத்தில் மிகப் பழமையான கீழடிக்கு இணையான நாகரீகம் இங்கு இருந்துள்ளதை நிரூபிக்கும் விதமாக பல தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
மற்றொரு பகுதியில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய நந்தி சிற்பம் ஒன்று வாய்ப்பகுதி உடைந்த நிலையில் பாதிக்கு மேல் மண்ணில் புதைந்துள்ளது. துர்க்கை மற்றும் காளி தெய்வ சிற்பங்கள் உட்பட பல சிற்பங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. அருகிலேயே ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. பழங்கால தமிழில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டில், ‘12-வது எண் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதியில் பாண்டிய நாட்டின் ராணுவப் படை ஒன்று பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை‘ தெரிவிக்கிறது.
தொல்லியல் சான்றுகள்
தமிழக தொல்லியல் துறையினரால் 2001-02 -ம் ஆண்டு மாங்குடியில் நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. நாயக்கன் புஞ்சை, லிங்கத்திடல், ஆவுடையாபுரம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வில் மட்பாண்டங்கள், ரோமானிய மட்பாண்டங்கள், குறியீடுகளுடன் கூடிய மட்பாண்டங்கள், தமிழ் பிராமி எழுத்துள்ள மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாங்குடியில் தேவியாற்றின் தென்பகுதியில் தொல்லியல் துறையினர் மேலும் அகழாய்வு செய்தால் இப்பகுதியின் வரலாற்றை முழுமையாக வெளிக் கொண்டு வந்தால் கீழடிக்கு இணையான மற்றொரு நாகரீகம் வெளிவரக் கூடும். இவ்வாறு போ.கந்தசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT