Last Updated : 19 Apr, 2018 09:00 AM

 

Published : 19 Apr 2018 09:00 AM
Last Updated : 19 Apr 2018 09:00 AM

அருப்புக்கோட்டை பேராசிரியை மீதான வழக்கு விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்?- பேராசிரியர்கள் சிலர் தலைமறைவானதாக தகவல்

அருப்புக்கோட்டை பேராசிரியை ஆடியோ வெளியான விவகாரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளுக்கு தவறாக வழிகாட்டிய பிரச்சினையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என இப்பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு நிர்மலாதேவி பயிற்சி மற்றும் தொலைநிலைக்கல்வி விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்தபோது சிலர் அவருடன் நெருங்கிய பழகியதாக கூறுகின்றனர்.

சிசிடிவி பதிவுகள் ஆய்வு

இதன் பின்னணியில்தான் அவர் மாணவிகளுடன் பேசி இருக்கிறார் என்ற புகாரும் உள்ளது. நிர்மலாதேவியின் பின்னணியில் இங்குள்ள உயர்நிலை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் புவனேஸ்வரன், செயலர் முத்தையா போன்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்கலைக்கழக வளாகம் மற்றும் முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தி உள்ளது.

இதுபோன்ற சூழலில், சிபிசிஐடி போலீஸார், ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் ஆகியோர் பல்கலைக்கழகத்தில் பலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்பிரச்சினையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஓரிரு பேராசிரியர்கள் திடீரென தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: அலுவலகரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நிர்மலாதேவிக்கு இப்பல்கலைக்கழகத்தில் உள்ள சிலருடன் தொடர்பு இருந்திருக்கிறது. பயிற்சிக்கு வந்தபோதும் அவர் வளாகத்தில் உள்ள பெண் அலுவலர்களுக்கான விடுதியில் தங்கி இருந்தார். நிர்மலாதேவியின் செயல்பாட்டுக்கு இங்குள்ள சிலரும் காரணமாக கருதப்படுவதால் இப்பல்கலைக்கழகமும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. இது ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் உண்மை நிலையைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x