Last Updated : 01 Apr, 2024 08:05 PM

6  

Published : 01 Apr 2024 08:05 PM
Last Updated : 01 Apr 2024 08:05 PM

“கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை” - அண்ணாமலை | ஆர்டிஐ ஆவணங்களை காட்டி திமுக மீது சாடல்

கோவை: “இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கும் முக்கியப் பங்கு உள்ளது” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களைக் காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை அவிநாசி சாலை சிட்ரா பகுதி அருகே கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களைக் காட்டியபடி செய்தியாளர்களிடம் கூறியது: “டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரம் குறித்த விரிவான தகவல்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இதுவரை கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவினர் பொய்யான தகவல்களையே கூறியுள்ளனர். தங்களுக்கு தெரியாமலே கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாகவும், இதைக் கண்டித்து கண்டனப் போராட்டங்கள் நடத்தியதாகவும், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் தமிழக மக்களை திமுகவினர் ஏமாற்றியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. கச்சத்தீவை தாரைவார்த்த விவகாரத்தில் இதுவரை காங்கிரஸ் கட்சியை மட்டுமே திமுக குறை கூறிவந்துள்ளது. இதில் திமுகவுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

இச்சம்பவத்தின்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிந்தே தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் மற்றும் திமுக, பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் மற்ற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கப்படவில்லை. 1974-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும், வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து பேசிய குறிப்புகள் வெளிவந்துள்ளன.

ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்தக் குறிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கச்சத்தீவை கொடுப்பது குறித்து பேசலாம். இப்போது வேண்டாம் என கருணாநிதி கேட்டுள்ளார். பின் கச்சத்தீவை இலங்கையிடம் வழங்குவதற்கு கருணாநிதி சம்மதம் தெரிவித்ததோடு சிறிய அளவு போராட்டங்கள் செய்வதாகவும் கூறி 21 முறை கடிதம் எழுதி நாடகமாடியுள்ளார். கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், வெளியுறவத் துறை அமைச்சகமும் ஆராய்ந்து வருகின்றன. பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

‘முத்ரா’ கடனுதவி தொழில்முனைவோருக்கு அதிகளவு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சிறந்த பலன் பெற்றுள்ளது. போக்குவரத்து நெருக்கடி காரணமாக கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் உள்ளிட்டவை வழங்க முடியவில்லை. கோவை - துபாய் இடையே விமான சேவை தொடங்கவும் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. கோவை மக்கள் மத்தியில் பாஜகவுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளதை பிரச்சாரத்தில் காண முடிகிறது” என்றார் அண்ணாமலை.

ஆர்டிஐ தகவல் சொல்வது என்ன? - தங்களிடம் அனுமதி பெறாமல் இந்திய ராணுவம் கச்சத்தீவுக்கு வரக் கூடாது என்று கூறிய இலங்கை ராணுவம், 1955-ல் கச்சத்தீவில் பயிற்சியில் ஈடுபட்டது. கடந்த 1960-ம் ஆண்டில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் செதல்வாத், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கே உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.

கச்சத்தீவு குறித்து 1961-ம் ஆண்டு நேரு, ‘இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் தரப்போவதில்லை. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை விரும்பவில்லை’ என்றார்.

ஆனால், கே.கிருஷ்ண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள், கச்சத்தீவுக்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று வாதிட்டனர். அதுவே, குண்டேவியா உள்ளிட்ட அதிகாரிகள், கச்சத் தீவு மீதான இந்தியாவின் உரிமை குறித்து சந்தேகத்தை முன்வைத்தனர். அதன்பிறகு தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக்கொடுக்க இந்தியா முடிவு செய்தது.

இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது உள்ளிட்ட காரணங்களும் இந்தியா இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய வெளியுறவுத் துறை செயலர் கேவல் சிங், மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தெரிவித்தார்.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 1974-ம் ஆண்டு கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமையை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். முதலில் 1974-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி கொழும்புவிலும், பிறகு ஜூன் 28-ம் தேதி டெல்லியிலும் கையெழுத்தானது.

வார்த்தைப் போர்: ஆர்டிஐ தகவல் வெளியான பிறகு, அதுகுறித்து பதிவிட்ட பிரதமர் மோடி, “யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்திருப்பது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட புதிய தகவல்களின் மூலம் அம்பலமாகி உள்ளது. இந்த புதிய தகவல்கள் ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.

காங்கிரஸை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதை மக்களின் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை அந்த கட்சி முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மக்களவைத் தேர்தலில் திசைதிருப்பும் நோக்குடன் இப்பிரச்சினையை கையிலெடுத்திருப்பதாக திமுகவும் காங்கிரஸும் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளன. அது தொடர்பான வெப் ஸ்டோரி > வார்த்தைப் போர் @ கச்சத்தீவு விவகாரம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x